Published : 11 Mar 2025 09:33 AM
Last Updated : 11 Mar 2025 09:33 AM
2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி என அனைத்துக் கட்சிகளும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கைகோத்து தனி அணி கண்டன. அப்போது ஓடோடி வந்து அதிமுக-வுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சி தேமுதிக. அப்படி இக்கட்டான நேரத்தில் தங்களுக்கு தோள் கொடுத்த தேமுதிக-வை தற்போது மிக எளிதாக ஒதுக்கித் தள்ள துணிந்திருக்கிறது அதிமுக தலைமை.
நெருக்கடியான நேரத்தில் நேசக்கரம் நீட்டிய தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக விட்டுக் கொடுக்கும், 2026-ல் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்றெல்லாம் கடந்த ஓராண்டாக மலைபோல் நம்பிக் கொண்டிருந்த தேமுதிக-வுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தது போல், “நாங்கள் எப்போது அவர்களுக்கு ராஜ்யசபா சீட் தருவதாகச் சொன்னோம்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பாஜக-வுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லவே இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்த பழனிசாமியின் போக்கில் அண்மைக் காலமாக மாற்றம் தெரிகிறது. திமுக-வை தவிர தங்களுக்கு யாரும் எதிரி இல்லை என்ற ரீதியில் அவர் பேச ஆரம்பித்திருப்பது பாஜக கூட்டணிக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்கான சமிக்ஞை தான் என்கிறார்கள்.
கூடவே, அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக தரப்பில் பாஸிட்டீவாக பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இதெல்லாமும் தான் பழனிசாமியை தேமுதிக-வுக்கு கைவிரிக்க வைத்திருக்கிறது.
பழனிசாமியின் இந்த அதிரடி முடிவை சகித்துக் கொண்டு தேமுதிக இனியும் அதிமுக கூட்டணியில் தொடர்வது சாத்தியமில்லாத விஷயமாகவே பேசப்படுகிறது. தேமுதிக-வுக்கான அடுத்த சாய்ஸ் திமுக கூட்டணியாகத்தான் இருக்க முடியும். ஆனால், ஏற்கெனவே திமுக கூட்டணியில் கட்சிகள் நிரம்பி வழிவதால் அங்கே தேமுதிக கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறி.
திமுக-வும் இல்லாத பட்சத்தில் தேமுதிக-வுக்கு இருக்கும் ஒரே வாசல், கூட்டணிக்குத் தயாராக இருக்கும் தவெக தான். தங்களை நம்பி வரும் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தவெக முன்கூட்டியே அறிவித்திருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது தேமுதிக-வுக்கு எளிதாகவே இருக்கும். ஆனால், அதற்கு தயாராக இருக்கிறாரா பிரேமலதா என்றால் அதுவும் சந்தேகம்தான்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக-வுடன் கூட்டணி வைத்து தாராளமாக 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை. அப்படி இருக்கையில், புதிய வரவான விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அது எந்தளவுக்கு தங்களுக்கு சாத்தியமாகும் என்ற கவலையும் தேமுதிக-வுக்கு இருக்கிறது. இதனால், 2019 மக்களவைத் தேர்தலைப் போல 2026-ல் பாஜக கூட்டணியில் இடம்பெற பாஜக தலைமையிடம் பிரேமலதா தனது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
இது சாத்தியமானால், “நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லை; பாஜக கூட்டணியில் இருக்கிறோம்” எனச் சொல்லிக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக, பாமக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, அமமுக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது பாஜக.
இது கைகூடினால் கட்சியின் எதிர்கால நலன் கருதி இந்தக் கூட்டணியில் இடம்பிடிக்கவே பிரேமலதா பிரயத்தனம் செய்வார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆக, அதிமுக முடிவால் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட தேமுதிக-வின் அரசியல் எதிர்காலம் கூட்டணி குறித்து பிரேமலதா எடுக்கப் போகும் புத்திசாலித்தனமான முடிவில் இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...