Published : 11 Mar 2025 06:07 AM
Last Updated : 11 Mar 2025 06:07 AM
தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும், அதை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) சார்பில், 54-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் பேசியதாவது:
தொழிலகங்களில் சிறு விபத்து நடந்தாலும், அதுகுறித்து விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும். அதேபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நிகழாமல் தடுக்க, விபத்துக்கான உண்மையான மூல காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்த ஒரு விதிமீறலுக்கும் தொழிற்சாலையின் உரிமையாளரும், மேலாளரும்தான் பொறுப்பாவார்கள்.
பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும், அதை கண்காணிக்கவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இணை இயக்குநர் எம்.வி.கார்த்திகேயன் பேசும்போது, ‘‘நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு காரணிகள் மிக முக்கியமானவை. சிபிசிஎல் நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனையை விரிவுபடுத்தியது பாராட்டுக்குரியது. பாதுகாப்பு மேலாண்மை அமைப்பில் தொழிலாளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்’’ என்றார்.
சிபிசிஎல் நிறுவனத்தின் இயக்குநர் (தொழில்நுட்பம்) ஹெச்.சங்கர் தனது தலைமை உரையில், சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு கூட்டமைப்பு உருவாக்கியுள்ள 9 உயிர்காக்கும் விதிகள் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக, நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் வி.ஸ்ரீராம் வரவேற்புரை ஆற்றினார். இயக்குநர் (ஆபரேஷன்) பி.கண்ணன் பாதுகாப்பு உறுதிமொழி
. 2024-25-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையை துணை பொது மேலாளர் ராஜேந்திரா ஜே.பரசுராம்குமார் வாசித்தார். நிறைவாக, நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜ்குமார் நன்றி தெரிவித்தார். பாதுகாப்பு விதிகளை சிறப்பாக கடைபிடித்தவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment