Published : 11 Mar 2025 12:45 AM
Last Updated : 11 Mar 2025 12:45 AM

தர்மேந்திர பிரதானின் சர்ச்சை கருத்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டமும்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் பிரதானின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்துக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரம் குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழக மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் ஜனநாயகமற்றவர்கள், அநாகரீகமானவர்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திரா பிரதான், நான் தமிழக எம்.பி.க்களை தவறாக பேசவில்லை. எனினும் நான் பேசியது புண்படுத்தி இருந்தால், எனது வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக எம்.பி.க்களை ‘அநாகரீகமானவர்கள்’ என கருத்து தெரிவித்ததற்காக தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூரில் எம்எல்ஏ மயிலை வேலு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் பகுதி திமுக சார்பில் சிந்தாதிரிப்பேட்டையிலும், தொடர்ந்து ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பு அருகே கட்சியின் மாநகர செயலாளர் ரகுபதி தலைமையில் திமுகவினர் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து முழக்கங்களை எழுப்பினர். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் தட்ர அள்ளி நாகராஜ் தலைமையில் கிருஷ்ணகிரி ரவுண்டானாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் மாநகர இளைஞரணி துணை செயலாளர் மூவேந்தன் தலைமையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது. கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் கடலூர் பாரதி சாலையில் மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தூத்துக்குடியில் தர்மேந்திர பிரதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x