Published : 11 Mar 2025 12:29 AM
Last Updated : 11 Mar 2025 12:29 AM

அரசு மருத்துவர்கள் நியமனத்தில் அரசின் மெத்தன போக்கால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

மருத்துவர்கள் நியமனத்தில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கால் மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு 4 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள செவிலியர்கள் மருத்துவம் பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து பனிக்குடம் உடைந்துவிட்டதாகக் கூறி கர்ப்பிணியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வழியிலேயே கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுத்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் வெகு குறைவாக உள்ளனர் என்றும் தெரிவித்து இருந்தேன். சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று பேட்டி அளித்தார். ஆனால், கள நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் தற்போதும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் நியமனத்தில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்குதான் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு காரணம். எனவே, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இதுபோன்ற அவல நிலையை அகற்ற மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x