Published : 02 Jul 2018 10:01 AM
Last Updated : 02 Jul 2018 10:01 AM
மழைநீர் வடிகால்களில் சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து கழிவுநீரை விடுவ தால் வட சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் மழை காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் வழிந்தோடுவதற்காக மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாநகரம் முழுவதும் 1900 கிமீ நீளத்துக்கு மேல் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு வியாசர்பாடி மகாகவி பாரதிநகர் பகுதியில் இயங்கி வரும் குடிநீர் வாரியத்தின் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் பின்புறம் உள்ள கழிவுநீரேற்றும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, அந்த நிலையத்திலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் விடப்பட்டது. போதுமான கழிவுநீர் லாரிகள் இருந்தும் இவ்வாறு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வியாசர்பாடி பகுதி மக்கள் கூறியதாவது: ஒருபுறம் சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், எல்இடி விளக்குகள் நிறுவுதல், நடை பாதைகள் மற்றும் பூங்காக்களை அழகாக்குதல், பல அடுக்கு வாகன நிறுத்தம், ஏரிகள் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெறுகின்றன. மறுபுறம் சென்னை குடிநீர் வாரியம் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்டு வருகிறது. அதனால் அப் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவ துடன், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை வதைக்கிறது.
இதை மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. இதுவரை குடிநீர் வாரியத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக வடசென்னையில் தான் இந்த செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
ஒரு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்க வேண்டும் என்றால், முதலில் குடிநீர் வாரியம் சார்பில், மழைநீர் வடிகால்கள், பக்கிங் ஹாம் கால்வாய் மற்றும் ஓட்டேரி கால்வாய் போன்ற நீர்வழித் தடங்களில் கழிவுநீர் விடுவதை நிறுத்த வேண்டும். கழிவுநீர் மேலாண்மைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் அவ்வாறு செய்யவில்லை. இதுபோன்று மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதால், அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. இது தவறு என்று தெரிந்தும் குடிநீர் வாரியம் இந்தச் செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக அவ்வாறு விடப்பட்டது. இனிமேல் விடமாட்டோம் என்றனர். அதேபோல் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் பேசி, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவது தடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT