Published : 10 Mar 2025 04:23 PM
Last Updated : 10 Mar 2025 04:23 PM
சென்னை: கல்வியில் மத்திய பாஜக அரசின் அரசியல் தலையீடு மன்னிக்க முடியாதது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மூர்க்கத்தனமான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு உண்மையிலேயே புரிகிறதா அல்லது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரிப்டை மீண்டும் சொல்கிறாரா?
கல்வியில் மத்திய பாஜக அரசின் அரசியல் தலையீடு மன்னிக்க முடியாதது. மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த துரோகத்தை நினைவில் கொள்வார்கள்.
தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல. அது ஆர்எஸ்எஸ்-ன் நிகழ்ச்சி நிரல். தமிழ்நாடு அதை முற்றிலுமாக நிராகரிக்கிறது. நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நமது திமுக எம்.பி.க்கள் கல்விக்காகவும் நமது மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். நீதி வெல்லும் வரை இந்தப் போராட்டம் நிற்காது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி இன்று (மார்ச் 10) காலை தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில், தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
“பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு பிறகு யு டர்ன் அடித்துவிட்டது. தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தில் இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள்.” என்று பிரதான் பதிலளித்திருந்தார்.
மேலும், தமிழக அரசை, தமிழக எம்பிக்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் கூறியதாக திமுக எம்.பி. வேதனை தெரிவித்தார். இதற்கு தர்மேந்திர பிரதான் வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும் இன்று மக்களவையில் நடந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பெரிய அளவு எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கூடவே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸும் தற்போது தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.
விரிவாக வாசிக்க > “பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு யு டர்ன்” - திமுக எம்.பி.க்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...