Published : 10 Mar 2025 05:23 AM
Last Updated : 10 Mar 2025 05:23 AM

சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது: நெல்லை பேராசிரியை விமலாவுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுபெறும் நெல்லை பேராசிரியை விமலாவுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வோருக்கு சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘எண்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் ப.விமலா, சாகித்யா அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

அவருக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘எனது ஆண்கள்’ நூலுக்காக 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் பேராசிரியர் விமலாவுக்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: பாளையங்கோட்டையை சேர்ந்த பேராசிரியர் விமலா, ‘எண்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை தமிழில் நேர்த்தியாக மொழியாக்கம் செய்ததற்காக சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். மலையாளத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து மலையாளத்துக்கும் பல்வேறு நூல்களை மொழிபெயர்த்துள்ள அவரது எழுத்துப்பணி, கல்விப்பணியோடு சிறக்கட்டும்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விமலாவுக்கு தமிழுடன் மலையாளம் கற்கவும், எழுதவும் ஆசை. அதன்படி டெல்லி ஜேஎன்யுவில் எம்ஏ, எம்பில், பிஎச்டி படித்தார். அதன்மூலம் இன்றைக்கு சாகித்ய அகாடமிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறார். எனவே முதல்வர் ஸ்டாலின் தனது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை அரசியலாக்காமல், ஏழை மாணவர்களும் அனைத்து வசதிகளை பெற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x