Published : 09 Mar 2025 12:13 PM
Last Updated : 09 Mar 2025 12:13 PM
சென்னை: மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு நேற்று வருகை புரிந்திருந்தார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: தமிழியல் உயராய்வுகளுக்கென்று தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு, மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று வருகை புரிந்தார்.
நிறுவனப் பணிகளையும் ஆய்வுப் பணிகளையும் கேட்டறிந்த அவர், நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டார். இங்கு உருவாக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கு, திருவள்ளுவர் அரங்கு, ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கபிலர் அரங்கு, தமிழ்த்தாய் ஊடக அரங்கு ஆகியவற்றைப் பார்வையிட்டு, பொருண்மைகளின் சிறப்புகளைக் கேட்டறிந்தார். தொல்காப்பியர் அரங்கில், நிறுவன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே உரையாற்றிய அவர், தமிழினப் பண்பாடு குறித்தும் இலக்கண இலக்கியச் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
உலகத் தமிழர் பரவல் குறித்துப் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள புடைப்பு ஓவியத்தைப் பார்வையிட்டு, தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் அவர்தம் பெற்றோரின் பூர்வீகம் குறித்தும் தற்போது மொரிசீயசில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.
வாழ்வியல் காட்சிக்கூடம், தொல்தமிழர்களின் பண்பாடுகளையும் விழுமியங்களையும் அறிவுத் துறைகளையும் உலகிற்குப் பறைசாற்றி நிற்பதாகவும், அதேபோல, நிறுவனத்தில் பல்வேறு தமிழ்ப் பணிகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் பாராட்டினார். முன்னதாக, நிறுவனத்தின் வரலாறு குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், ஸ்டாலின் கோபிநாத், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன், நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment