Published : 08 Mar 2025 05:27 PM
Last Updated : 08 Mar 2025 05:27 PM

ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது கிராமத்தில் பழமையான வெங்கடேசப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடல், பாடல் நிகழ்ச்சி எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்னையுமின்றி அமைதியாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 11ம் தேதி அன்று கோயில் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த கடலூர் துறைமுகம் போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இதேபோல கடலூர் மாவட்டம் அகரத்தில் உள்ள ஸ்ரீ நல்ல கூந்தல் அழகிய அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கேட்டு கணேசமூர்த்தி என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சதீஷ்குமார், “இதற்கு முன்பாக எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. ஆனால் போலீஸார் இந்தாண்டு அனுமதி மறுத்துள்ளனர்,” என்றார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அந்த கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்ப்படவில்லை,” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “பொதுவாக தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டே தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி, ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்த போலீஸாரின் உத்தரவுகளை ரத்து செய்கிறேன். கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு போலீஸார் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதியளிக்க வேண்டும். போலீஸாரின் பாதுகாப்புக்காக மனுதாரர்கள் தலா ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும்.

குறிப்பாக ஆடல், பாடல் நிகழ்வுகளின் போது மாணவர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் மனதைக் கெடுக்கும் வகையில் ஆபாச நடனங்களோ, அல்லது இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களோ கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. அதேபோல சாதி, மதம், அரசியல் தொடர்பான பாடல்கள், பேனர்கள், வசனங்கள், நடனங்கள் இடம்பெறக்கூடாது. சாதி, மத ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்தலாம்.

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல அனுமதிக்கப்பட்ட நேரத்தைத்தாண்டி ஒருபோதும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல போலீஸாரும் தேவையான நிபந்தனைகளை விதிக்கலாம்,” என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon