Published : 08 Mar 2025 03:19 PM
Last Updated : 08 Mar 2025 03:19 PM
சென்னை: “காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அந்த விடுதிகளை அமைக்க இருக்கிறோம்” என்று சென்னையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான். அதுவே முழுமையான சமூக நீதி. திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், வாழ்நாளெல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார். திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டது.
திராவிட இயக்கத்துக்கு ஆதி விதையான நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது. சுயமரியாதை திருமண சட்டம், சொத்துரிமை, காவல்துறையில் மகளிர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று பல முற்போக்குத் திட்டங்களை கொண்டு வரப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப் பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினரை பங்கு பெறச் செய்திருக்கிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பாதுகாக்க ‘பாலின வள மையங்கள்’உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த, 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கினோம். அதில் வெற்றி பெற்றதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் சுய உதவிக் குழு மகளிர்தான்.
வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புவது, புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, R.O. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அதை அமைக்க இருக்கிறோம்.
சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற விதமாகவும், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற விதமாகவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியத்துடன் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம். இதில், காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில், 1000 மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு நான் அடையாள அட்டைகளை வழங்கி இருக்கிறேன். அதன் பயன்கள் என்ன தெரியுமா? கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கின்ற பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன்களைப் பெறலாம்.
கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெறப்படுகின்ற பல்வேறு கடன்கள் பெற முன்னுரிமை அளிக்கப்படும். கோ-ஆப் டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.
குறைந்த விலை ஆவின் பொருட்களைப் பெறலாம். இ-சேவை மையங்களில், 10 விழுக்காடு சேவைக் கட்டணம் குறைக்கப்படும். இன்று தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 73 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4 லட்சத்து 42 ஆயிரத்து 949 மகளிருக்கு 3 ஆயிரத்து 190 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி இருக்கிறேன்.
இதை தொடங்கி வைக்கின்ற விதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுகின்ற 3 ஆயிரத்து 584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 592 மகளிருக்கு 366 கோடியே 26 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை இந்த நிகழ்ச்சியில் வழங்கி இருக்கிறேன்.வங்கிக் கடன் இணைப்புகளைப் பெற்ற மகளிர் குழு சகோதரிகள், அந்தத் தொகையை நாங்கள் வழங்குகின்ற கடன் என்று நினைக்காமல், நம்முடைய அரசும், நானும் உங்கள் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக நீங்கள் நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியலில், வேலை பார்க்கின்ற இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் உரிய மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கேலி பேசுவதும், அவர்கள் வளர்ச்சியைக் கொச்சைப்படுத்துவதும் இருக்கவே கூடாது. அதுதான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. இதை எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டும். திராவிட மாடல் அரசில் பெண்களுக்கான திட்டங்களைப் பார்த்து பார்த்து இப்போது ஆண்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். “என்னங்க எல்லா திட்டங்களும் பெண்களுக்குத் தானா…எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்” என்று ஆண்கள் கேட்கக்கூடிய அளவில் தான் இன்றைக்கு செயல்படுகிறோம். அது தொடரும், தொடரும்.
மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் தங்களுடைய குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். அது ஆண்களையும் சேர்த்துதான் வளர்ச்சியடையச் செய்யும். என்னை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து, பாசம் காட்டுகின்ற அத்தனை தாய்மார்கள், அவர்கள் குடும்பத்தின் ஆண்கள் என்று அனைத்துத் தரப்புக்குமான நல்லாட்சியாக, திராவிட மாடல் ஆட்சி எப்போதும் தொடரும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment