Published : 08 Mar 2025 05:50 AM
Last Updated : 08 Mar 2025 05:50 AM
சென்னை: சென்னை, தீவுத்திடலில் சிஎம்டிஏ சார்பில் ரூ.113 கோடியில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம் உள்ளடக்கிய பொது சதுக்கப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.113 கோடி மதிப்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம் உள்ளடக்கிய பொது சதுக்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சி மையம், பாரம்பரியமிக்க கட்டிடக்கலை அமைப்புடன், 40 கண்காட்சி அரங்குகள், பொது நிகழ்ச்சி கூடங்கள், உணவகங்கள், 8 மின் தூக்கி வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதிகள் மற்றும் 200 நவீன கழிப்பிட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சி மையம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிரந்தர மையமாக அமைக்கப்படுவதால், அரசின் பல்வேறு துறைகளின் செலவினங்கள் குறைக்கப்படுவதுடன், மக்களுக்குத் தேவையான, அனைத்து மேம்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், அரசு துறைகளின் கண்காட்சிகள், கருத்தரங்குகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இம்மையத்தில் நடத்தப்படும்.
இந்த கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் அன்சுல் மிஸ்ரா சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment