Published : 18 Jul 2018 05:23 PM
Last Updated : 18 Jul 2018 05:23 PM
பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியொன்றில் தீ விபத்து ஏற்பட்டதில், மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள கட்டிடத்தில் 2-வது மாடியில் பயன்படுத்தப்படாத பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2-வது மாடியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக இதர கட்டிடத்தில் வகுப்பறைகளில் படித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான பெற்றோர் பதற்றத்துடன் பள்ளி முன் குவிந்தனர். அவர்களிடம் பேசிய பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், துணை காவல் ஆணையர் சுகுணாசிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, “தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். பள்ளியில் தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளனவா?, தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். ஏதேனும் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT