Published : 07 Mar 2025 04:47 PM
Last Updated : 07 Mar 2025 04:47 PM
பிறப்பு முதல் 18 வயது வரையில் மனவளர்ச்சி குன்றிய, காது கேளாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையான செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
காஞ்சிபுரம் மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குழந்தை வளர்ச்சி தாமதம், மன வளர்ச்சி குறைபாடு, பெருமூளை வாதம், செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிக்சை அளிக்க இந்த தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.1.14 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மையம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும்போது, குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினைகள் இருந்தால் உயிர் வாழ்வு மற்றும் வளர்ச்சி போன்ற சிறப்பு சிகிச்சை அளிக்க குழந்தை மருத்துவர், துணை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் இந்த மையத்துக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மையம் முழுமையான செயல்பாட்டுக்கு வர மருத்துவர்கள், ஊழியர்கள் என 15 பேர் தேவைப்படுகின்றனர். ஆனால் இதுவரை ஒரே ஒரு ஊழியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மையத்துக்கு தனியாக மருத்துவர்களும் நியமிக்கப்படவில்லை, மருத்துவ கருவிகளும் போதிய அளவில் வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனையில் பணி செய்யும் குழந்தை நல மருத்துவர் ஒருவர் மட்டுமே மாற்று பணி மூலம் இந்த மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார். முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் முழுமையான செயல்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை கொண்டு வந்தவர்கள் அங்கு பணியாளர்களை நியமிப்பதற்கான எந்த உத்தரவையும் இதுவரை வழங்கவில்லை. தொகுப்பூதியத்தில் மேலாளர் பொறுப்பு மட்டுமே போடப்பட்டுள்ளது. மற்ற பதவிகள் காலியாகவே உள்ளன. ஒரு பல் மருத்துவர் மட்டுமே மாற்றுப்பணி மூலம் வாரத்துக்கு 3 நாட்கள் வந்து செல்கிறார்.
அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் ஒருவர் இங்கு வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். இந்த மையம் முழுமையான செயல்பாட்டுக்கு வராததால் இங்கு குழந்தைகள் வருகையும் குறைவாகவே உள்ளது. விரைவில் இந்த மையத்துக்கு தேவையான மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும், உரிய கருவிகளை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நளினியிடம் கேட்டபோது குழந்தை நல மருத்துவர் ஒருவர் மூலம் இந்த மையத்தை தற்போது செயல்படுத்தி வருகிறோம். விரைவில் தேவையான பணியாளர்களை கேட்டு பெற்று முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவருவோம். இந்த மையத்துக்கு குழந் தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT