Published : 07 Mar 2025 01:21 PM
Last Updated : 07 Mar 2025 01:21 PM

சட்ட உரிமைகளை மகளிர் முழுமையாக பெறும் சூழலை உருவாக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்ரகிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வப் பெருந்தகை கூறுகையில், “சுதந்திர இந்தியாவில் மகளிர் தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராடி வெற்றி கண்ட நாளை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அவர்களது உரிமைகளை பாதுகாப்பதில் காங்கிரஸ் பேரியக்கம் எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்திய பெருமை காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும். மகளிர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து, அது தற்போது 50 சதவீதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்து மறைந்த, பிரதமர் ராஜீவ்காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியவர் அன்னை சோனியா காந்தி.

ஆனால், 2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்துகிற மத்திய பா.ஜ.க. அரசு, மகளிர் மசோதாவையும் நிறைவேற்றி செயல்படுத்தாமல் கண் துடைப்பு நாடகத்தை நடத்தி வருகிறது. மகளிர் தங்களது உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் உயர்வு அடைந்து அவர்களது லட்சியங்கள் நிறைவேறுவதன் மூலமே ஏற்றம் பெறும்.

மத்திய பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x