Published : 07 Mar 2025 11:01 AM
Last Updated : 07 Mar 2025 11:01 AM

‘பெண்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக நடமாடும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்’ - அன்புமணி

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.

உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அந்த மரியாதை பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பாடத்தையும், நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் கூட இன்று பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை. பொது இடங்களும் பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறியுள்ளன. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே பெண்களுக்கு தமிழ்நாடு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது உண்மையாகவே கவலையளிக்கும் செய்தியாகும்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றை போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x