Published : 07 Mar 2025 06:36 AM
Last Updated : 07 Mar 2025 06:36 AM
சென்னை: வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லாத ஓட்டல்கள் எவை என போக்குவரத்து போலீஸார் நேற்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அதன்படி, 80 ஓட்டல்களில் வாகன நிறுத்தும் வசதி இல்லை என தெரியவந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதுஒருபுறம் இருக்க சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணியாலும் சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன.
மேலும், சாலையோரம் அமைந்திருக்கும் பல ஓட்டல்களில் வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஓட்டல்களுக்கு வருவோர் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதும் நெரிசலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து, வாகன நிறுத்தும் வசதி இல்லாத முக்கியமான ஓட்டல்கள் எவை என போக்குவரத்து போலீஸார் நேற்று கணக்கெடுத்தனர்.
அதன்படி, சென்னையில் பிரபலமான 80 ஓட்டல்களில் வாகன நிறுத்தும் வசதி இல்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை போக்குவரத்து போலீஸார் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த ஓட்டல்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...