Published : 07 Mar 2025 12:12 AM
Last Updated : 07 Mar 2025 12:12 AM
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: விளாங்குடியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, ஜாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றவும், கட்சியினர், அமைப்பினர் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தும், அதுவரை இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், "தனி நீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? கொடிக்கம்பத்தை சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளட்டும்" என்றனர். மனுதாரர் தரப்பில், "கொடிக்கம்பங்கள் அமைப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், "கொடிக்கம்பங்கள் அமைப்பது அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமை, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார். அரசு தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, "சாலையோரங்களில் கொடிகள் வைப்பது கட்சிகளின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது. இவற்றை கருத்தில் கொள்ளாமல், உத்தரவு பிறப்பிக்க கூடாது. சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே சாலைகளில் கொடி மரங்கள் நடுவது வழக்கத்தில் உள்ளது சேர, சோழ, பாண்டியர்கள் இமயத்திலும் கொடி நட்டார்கள் என்ற பெருமை தமிழர்களுக்கு உண்டு. கொடிகாத்த குமரன் வரலாறு நமக்கு தேசப்பற்றை ஊட்டுகிறது. ஏதாவது சில அசம்பாவிதம் நடைபெற்று இருக்கலாம் அதற்காக, முற்றிலும் தடை விதிக்க கூடாது. இது கட்சிகளின் ஜனநாயக உரிமை" என்றார்.
பின்னர் நீதிபதிகள், "கொடிகாத்த குமரன் கையில்தான் கொடி வைத்திருந்தார். கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கொடி வைத்துக் கொள்ளட்டும், சாலைகளில் வேண்டாம். மக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்படும் விஷயங்களில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம்.
சாலைகளில் கட்சிக் கொடிகள், ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இவை குடும்பத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சட்டவிதிகளின்படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ கொடிக் கம்பம் வைக்கும் அனுமதியை வழங்க அரசுக்கு அதிகாரமில்லை. சாலைகளில்தான் கொடிகளை அமைக்க வேண்டும் என்பதை ஜனநாயக உரிமையாக கருத முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment