Published : 06 Mar 2025 05:03 PM
Last Updated : 06 Mar 2025 05:03 PM
சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை எம்ஜிஆர் நகரில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் சிறை பிடித்தனர். அவரை விடுவிக்கக் கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜக சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் இன்று (மார்ச் 6) நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.அப்போது, அனுமதியின்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் தடுத்தனர்.
கையெழுத்து இயக்கத்தை கைவிட்டு, இங்கிருந்து கலைந்து செல்லுமாறு, தமிழிசை உட்பட பாஜகவினர் அனைவரையும் போலீஸார் எச்சரித்தனர். ஆனால், தமிழிசை சவுந்தரராஜன், “பொதுமக்களிடம் கையெழுத்து பெறாமல், இங்கிருந்து ஒரு அடிகூட நகர மாட்டேன்” என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கேயே நின்றார். போலீஸார் அவரை சூழ்ந்துகொண்டு சிறை பிடித்து வைத்திருந்தனர். தொடர்ந்து, 2 மணி நேரத்துக்கும் மேலாக தமிழிசை அங்கேயே நிற்க வைக்கப்பட்டார். இதையடுத்து, தமிழிசையை விடுவிக்குமாறு பாஜகவினர் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் அப்போது, போலீஸார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த கையெழுத்து இயக்கத்தைக் கேள்விப்பட்டு, திமுகவினரும் அங்கு திரண்டு, பாஜகவினரைக் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், போலீஸார் திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 2 மணி நேரத்துக்குப் பிறகு, பொதுமக்களிடம் கையெழுத்து பெற தமிழிசைக்கு போலீஸார் அனுமதி வழங்கினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ஓர் அரசியல் கட்சித் தலைவரை கொடுமைப்படுத்தி 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். கைது செய்யுங்கள் என்றாலும் கைது செய்ய போலீஸார் மறுக்கின்றனர். இது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ இல்லை. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். முதல்வர், அமைச்சர்கள் வீட்டில் இருப்பவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் இந்தி திணிப்பு என மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். குழந்தைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ‘அப்டேட் முதல்வராக’ இல்லை. இவரை முதல்வராக வைத்துக்கொண்டு தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாது. பாமர மக்களுக்கு கல்வி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். எத்தனை அடக்குமுறைகளை கையாண்டாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று அவர் கூறினார்.
பயந்து பின்வாங்கப்போவதில்லை... - இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், தமிழிசை சவுந்தரராஜனை கைது செய்திருக்கிறது தமிழக காவல் துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதல்வர் அவர்களே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு பயந்துவிட்டது.! - தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் செல்வந்தர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி ஒன்று நிலை மாற வேண்டும். சம கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்கத்தை புதன்கிழமை ஆரம்பித்து இன்று (மார்ச் 6) தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் இது தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அனைத்து இடங்களிலும் திட்டமிடப்பட்டது.
தென் சென்னையின் சார்பில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பக்கத்தில் கையெழுத்து இயக்கத்தை நாங்கள் தொடங்க இருந்தோம். அமைதியான முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் கோஷமோ இல்லாமல் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கே குவிக்கப்பட்டு கையெழுத்து வாங்க கூடாது என்று தடுத்தார்கள்.
நாங்கள் அமைதியாக தானே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னோம். இல்லை, கையெழுத்து வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி சுமார் 30-40 போலீஸ் என்னை சூழ்ந்து கொண்டு என்னை எதுவும் செய்ய விடாமல் என்னை நகரக்கூட விடாமல் கடும் வெயிலில் மூன்று மணி நேரம் நிறுத்தி வைத்தனர். நான் கையெழுத்து வாங்காமல் போகமாட்டேன் என்று தீவிரமாக நின்று அதற்கு பின்பு கையெழுத்தை வாங்கிவிட்டு வந்தோம். அவர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும் என்று சொன்னார்கள். அங்கு ஆர்ப்பாட்டமும் பேரணியோ பொதுக் கூட்டமோ நடைபெறவில்லை. அமைதியாக ஒரு அரசியல் தலைவர் பொதுமக்களை சந்திப்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று கேட்டேன். அதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி என்னை கைது செய்யாமல் என்னை நகரவும் விடாமல் மூன்று மணி நேரம் போலீஸார் சுற்றுவளைத்து நின்று கொண்டே இருந்தார்கள்.
நானும் அவர்களுக்கு அடிபணியாமல் இது எனது உரிமை பொதுமக்களை பார்ப்பதை தடுக்க முடியாது என்று போராடி பின்பு கையெழுத்தை வாங்கினோம். இந்த நடவடிக்கையில் இருந்து தமிழக அரசு பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பார்த்து பயந்து இருக்கிறது. போலீஸார் சுற்றி வளைத்த பின்பும் கூட பொதுமக்கள் ஆர்வமாக வந்து கையெழுத்து போட்டதை பார்த்து பாமர மக்களுக்கு சம கல்வி கிடைக்க வேண்டும் என்ற எங்களது கொள்கை வெற்றி பெற்றதாகவே நான் நினைக்கிறேன். எங்களது கையெழுத்து இயக்கம் தொடரும். ஒரு கோடி கையெழுத்து நிச்சயமாக பெறுவோம். அடக்குமுறை எங்களை அடக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...