Last Updated : 06 Mar, 2025 09:33 AM

1  

Published : 06 Mar 2025 09:33 AM
Last Updated : 06 Mar 2025 09:33 AM

செல்லூர் ராஜூவுக்கு சிக்கல்! - மதுரை மேற்கில் எம்ஜிஆர் சென்டிமென்டை உடைக்க அமைச்சர் மூர்த்தியை இறக்கிய திமுக 

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சித் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாகவே இன்றைக்கும் பார்க்கப்படுகின்றன. அதில் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை எம்ஜிஆர் போட்டியிட்ட அருப்புக்கோட்டை, ஆண்டிபட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் வசிக்கும் மக்கள் “இது எம்ஜிஆர் போட்டியிட்ட தொகுதி” என்று சொல்லிக் கொள்வதை இன்றைக்கும் பெருமையாக நினைக்கிறார்கள்.

இந்த மூன்று தொகு​தி​களில் அருப்​புக்​கோட்​டையை​யும் ஆண்டிபட்​டியை​யும் இப்போது திமுக தன்வச​மாக்கி வைத்​திருக்​கிறது. ஆனால், மதுரை மேற்​கில் திமுக-​வால் நீண்ட காலமாக கால்​ப​திக்க முடிய​வில்லை. 1977 முதல் இதுவரைக்​கும் 7 முறை இந்தத் தொகு​தி​யைக் கைப்​பற்றி இருக்​கிறது அதிமுக. தொடர்ச்சியாக கடந்த மூன்று தேர்​தல்​களாக இங்கு வாகை சூடி வருகிறார் செல்​லூர் ராஜூ. திமுக இங்கு 3 முறை மட்டுமே வென்​றுள்​ளது. சங்கரய்யா, கே.டி.கே.தங்​கமணி, எம்ஜிஆர், பொன்​.​முத்​து​ராமலிங்​கம், பி.டி.ஆர்​.பழனிவேல்​ராஜன், செல்​லூர் ராஜு ஆகியோர் இங்கு நின்று வென்ற முக்கிய தலைவர்​கள்.

2021 தேர்​தலில், மதுரை மாவட்​டத்​தி​லுள்ள 10 தொகு​தி​களில் மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தி, சோழவந்​தான் தொகு​தி​களில் திமுக வெற்றி பெற்​றது. மதுரை மேற்கு, உசிலம்​பட்டி, திரு​மங்​கலம், திருப்​பரங்குன்​றம், மேலூர் தொகு​தி​களில் அதிமுக வெற்றி​பெற்​றது.

மதுரை மேற்​கில் அதிமுக தொடர்ந்து வெற்றி​பெறு​வதற்கு அது எம்ஜிஆர் களம்​கண்ட தொகுதி என்ற சென்​டிமென்​டும் முக்கிய காரணி. 2026-ல் இந்த சென்​டிமென்டை உடைத்து மதுரை மேற்​கில் உதய சூரியனை உதிக்க வைக்​கும் பொறுப்பை அமைச்சர் மூர்த்தி வசம் ஒப்படைத்​திருக்​கிறது திமுக தலைமை. ஆனால், அது முடியவே முடி​யாது என்கிறார் செல்​லூர் ராஜூ.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை திமுக-​வினர், “200 தொகு​தி​களில் வென்றாக வேண்​டும் என்று இலக்கு வைத்​திருக்​கும் தலைவர் ஸ்டா​லின், அதற்​கேற்ப நுணுக்​கமாக சிந்​தித்து செயல்​பட்டு வருகிறார். அண்மை​யில் ஒரு சில மாவட்​டங்​களுக்கு செயலா​ளர்களை மாற்றியதுகூட அப்படித்​தான்.

மதுரை மாவட்​டத்​தி​லும் மாவட்டச் செயலா​ளர்​களின் எல்லையை மாற்றி அமைத்​திருக்​கிறார் ஸ்டா​லின். மதுரை மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு தொகு​திகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் மாவட்டச் செயலா​ளராக கோ.தளபதி இருந்​தார். தற்போதைய மாற்​றத்​தில் அவரிட​மிருந்து மதுரை மேற்கு தொகு​தியை பிரித்து அதை மதுரை வடக்கு மாவட்டச் செயலா​ளரான அமைச்சர் மூர்த்தி வசம் கொடுத்​திருக்​கிறார்​கள்.

ஏற்கெனவே மதுரை கிழக்கு, சோழவந்​தான், மேலூர் தொகு​திகளை உள்ளடக்கிய மதுரை வடக்கு மாவட்​டத்​துக்கு மூர்த்தி செயலா​ளராக இருந்​தார். இப்போது கூடு​தலாக மதுரை தெற்கு தொகு​தி​யும் அவரது கட்டுப்​பாட்டுக்​குள் வந்திருக்​கிறது. மூர்த்தி​யிடம் எந்த வேலை​யைக் கொடுத்​தா​லும் அதை நேர்த்தி​யாகச் செய்​வார் என்பது தலைமைக்கு தெரி​யும்.

அந்த வகையில் தான், எம்ஜிஆர் தொகுதி என்ற சென்​டிமென்டை உடைத்து இம்முறை அங்கு திமுக-வை ஜெயிக்க வைக்​கும் பொறுப்பை மூர்த்தி வசம் ஒப்படைத்​திருக்​கிறது தலைமை. கடந்த முறை சுமார் 9 ஆயிரம் வாக்​குகள் வித்​தி​யாசத்​தில் கைவிட்டுப் போன மதுரை மேற்கை இம்முறை எப்பாடு பட்டாவது கைப்​பற்றிக் காட்டு​வார் மூர்த்தி” என்றனர்.

எம்ஜிஆர் சென்​டிமென்டை திமுக-​வால் உடைக்க முடி​யுமா என்று மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வி.கே.​சாமி​யிடம் கேட்​டதற்கு, “எம்​ஜிஆர் போட்​டி​யிட்ட மதுரை மேற்கு தொகு​தி​யில் மதிச்சி​யம், ஆழ்வார்​புரம், செல்​லூர், தல்லாகுளம், ஆத்தி​குளம், ஆரப்​பாளையம் பகுதிகள் இருந்தன. ஆனால், இவை எல்லாம் தற்போது மதுரை மத்தி, தெற்கு, வடக்கு தொகு​தி​களுக்​குள் போய்​விட்டன.

இப்போதுள்ள மேற்கு தொகு​திக்​குள் பரவை, விளாங்குடி, துவரி​மான், கீழமாத்​தூர், மேலக்​கால் உள்ளிட்ட கிராமப்பு​றங்களே இருக்​கின்றன. இந்தத் தொகு​தி​யில் பெரும்​பான்​மையாக முக்​குலத்​தோர் இருக்​கிறார்​கள். இவர்​களில் பெரும்​பகு​தி​யினர் அதிமுக ஆதரவு மனப்​பான்​மை​யில் இருப்​பவர்​கள். அதை மாற்ற வேண்​டும் என்ப​தற்​காகவே முக்​குலத்​தோர் அல்லாத தளபதியை ஒதுக்​கி​விட்டு முக்​குலத்​தோரான மூர்த்தி​யின் ஆளுகைக்​குள் மதுரை மேற்கை கொண்டு வந்திருக்​கிறது திமுக.

இந்தத் தொகு​திக்​குள் மூர்த்தி​யின் உறவினர்​கள், விசு​வாசிகள் அதிகம் இருக்​கிறார்​கள். தற்போதைய சூழலில் அதிமுக-​வில் கட்சிக்கு விசு​வாசமான தொண்​டர்கள் அரிதாகி விட்​டார்​கள். பெரும்​பாலும் வியா​பாரிகள் தான் கட்சிக்​குள் ஆதிக்கம் செலுத்துகிறார்​கள்.

போதாக்​குறைக்கு, கட்சி​யும் சிதறிக் கிடக்​கிறது. இவை அனைத்தை​யும் நன்கு உணர்ந்து அதி​முக-​வினர் களப்பணி ஆற்றி​னால் தான் தொகு​தி​யைத் தக்​கவைக்க முடி​யும். இல்​லா​விட்​டால், தனக்கு தெரிந்த வித்தைகளை பயன்​படுத்தி தொகு​தியை மூர்த்தி தட்​டிப் பறித்​தாலும் ஆச்​சரியமில்​லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x