Published : 06 Mar 2025 06:04 AM
Last Updated : 06 Mar 2025 06:04 AM
சென்னை: சென்னை மாநகரில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள 57 புதிய வாகனங்களை, மாநகராட்சி பயன்பாட்டுக்கு மேயர் ஆர்.பிரியா அனுப்பி வைத்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியும் நடைபெற்று வருகிறது. மார்ச் 3-ம் தேதி வரை 51,214 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணியில் ஏற்கெனவே உள்ள 102 வாகனங்களுடன் கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜேசிபி வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57 புதிய வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளன.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கொடியசைத்து வைத்து, இந்த வாகனங்களை மாநகராட்சி பயன்பாட்டுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சட்டவிரோதமாக கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜன. 1 முதல் பிப்.28-ம் தேதி வரை கட்டிடக் கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண்காணிப்பு படையினரால் ரூ.13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment