Published : 05 Mar 2025 07:06 PM
Last Updated : 05 Mar 2025 07:06 PM
மதுரை: அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு பணப்பலன் வழங்க மறுத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அரசு மேல் நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அரசு மேல் நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் கொடுங்குளம் அரசு பள்ளிகளில் 35 ஆண்டுகள் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து 2011-ல் ஓய்வு பெற்றவர்கள் முறையே பொன்னம்மாள், ஸ்ரீதேவி, செல்வக்கிளி. இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2023-ல் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி, தூய்மைப் பணியாளர்களுக்கு 12 வாரத்தில் ஓய்வூதியப் பலன்கள் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் கல்வித் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி 3 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியாகவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ் வாதிட்டார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி நேரில் ஆஜராகியிருந்தார். அவரிடம் மனுதாரர்களுக்கு 2 ஆண்டுகளாக ஓய்வூதியப் பலன் வழங்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் தலா ஒரு வாரம் சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை 2 வாரத்தில் நிறைவேற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, உடனடியாக உயர் நீதிமன்ற நீதிமன்ற பதிவாளர் முன் சரணடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment