Published : 05 Mar 2025 05:07 PM
Last Updated : 05 Mar 2025 05:07 PM
சென்னை: கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்க, ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு அதிக நிலக்கரியை அனுப்புவதற்கு வசதியாக 21 சரக்கு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி முழு மின்னுற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்டு சரக்கு ரயில்கள் மூலம் பாரதீப் துறைமுகத்துக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அங்கிருந்து கப்பல் மூலம் தமிழகத்துக்கு எடுத்து வரப்படுகிறது.
ஆனால், சுரங்கங்களிலிருந்து துறைமுகத்துக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கு போதிய அளவு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், ஒரு சரக்கு ரயிலில் சராசரியாக 3,750 டன் எனத் தினமும் 15 ரயில்களில் சராசரியாக 55 ஆயிரம் டன் அளவுக்குத்தான் நிலக்கரி துறைமுகத்துக்கு அனுப்பப்படுகிறது. இதனால், அனல்மின் நிலையங்களில் தினமும் 3 ஆயிரம் மெகாவாட் வரை மட்டுமே மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால், தற்போதுள்ள தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் வரும் நாட்களில் 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு ஏற்ப அதிக மின்சாரம் தேவைப்படுவதால், அனல்மின் நிலையங்களில் முழு அளவில் மின்னுற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
எனவே, தமிழகத்துக்குக் கூடுதலாக நிலக்கரியை விரைவாக எடுத்துக் கூடுதல் சரக்கு ரயில்களை ஒதுக்குமாறு, மத்திய அரசுக்கு, மின்வாரியம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, தமிழகத்துக்கு 21 சரக்கு ரயில்களை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு 78 ஆயிரம் டன் நிலக்கரி தற்போது அனுப்பப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மின்வாரிய அனல்மின் நிலையங்களில் 23 நாட்களுக்குத் தேவையான 17 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT