Published : 05 Mar 2025 04:20 PM
Last Updated : 05 Mar 2025 04:20 PM
சென்னையில் ஒழிக்கவே முடியாத பிரச்சினையாக கொசு தொல்லை உள்ளது. சென்னை மாநகரில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் உள்ளன. இவற்றிலும், பெரும்பாலான மழைநீர் வடிகால்களிலும் 365 நாட்களும் கழிவுநீர் தேங்குவதால், அவற்றில் கொசு உற்பத்தியாகி, ஆண்டு முழுவதும் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிப்ரவரி- மார்ச், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளுக்குள் கொசு வலை அமைத்திருந்தாலும், வாயில் கதவை திறக்கும்போது, கொசுக்கள் உள்ளே வந்துவிடுகின்றன. படுத்து உறங்கும்போது, வலைகள் மீது படும் கை, கால்களையும் கொசுக்கள் பதம்பார்த்து விடுகின்றன. ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்கள் பறக்க முடியாமல் தரையில் விழுந்து கிடக்கின்றன. தூங்கி எழும் மக்கள் அதை மிதித்து வீடெங்கும் ரத்த கறையாக காட்சியளிக்கிறது. கொசுத் தொல்லையால் குறிப்பாக வட சென்னை மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னைவாழ் மக்கள் கூறியதாவது: இரவில் எங்களால் தூங்க முடியவில்லை. மாநகராட்சி சார்பில் புகை பரப்புவதையே பிரதான பணியாக மேற்கொள்கின்றனர். கொசு உற்பத்தி ஆதாரங்களை தேடுவதே இல்லை. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கொசு தொல்லை தொடர்பாக பேசும் கவுன்சிலர்கள் புகை பரப்பும் இயந்திரத்தை அனுப்பவே கோருகின்றனர்.
கொசுவை சாகடிக்காத ஒரு முறையை எதற்காக பயன்படுத்துகின்றனர் என்றே தெரியவில்லை. உண்மையில் சென்னையில் கொசு சாகிறது என்றால், அது கொசுபேட்டால் மட்டுமே சாத்தியமாகிறது. இப்போது அதிகரித்திருக்கும் கொசுக்களால் அந்த பேட்டுகளே செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 100-க்கும் மேற்பட்ட கொசுக்களை பேட் மூலம் கொன்று வருகிறோம். அந்த அளவுக்கு கொசு பல்கி பெருகி உள்ளது.
உயரதிகாரிகளிடம் புகார் கூறினால், சென்னையில் ஏராளமான ஆறுகளும், கால்வாய்களும், மழைநீர் வடிகால்களும் உள்ளன. அதில் விதிகளை மீறி கழிவுநீர் விடப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரியத்தை மாநகராட்சி கட்டுப்படுத்த முடியாது. அதனால் கொசு ஒழிப்பு சாத்தியமில்லை என கை விரிக்கின்றனர்.
அறிவியல் ரீதியிலான நடைமுறை இல்லாததால், நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை அழிக்க எம்எல்ஓ எண்ணெய்களை ஊற்றி இயற்கையாக, கொசுப்புழுக்களை உண்ணும் உயிரினங்களான டிப்லோனிகஸ் இன்டிகஸ் போன்றவற்றை மாநகராட்சி அழித்துவிட்டது. மாலை நேர கொசுக்களை அழிக்க, காலையில் புகை பரப்பப்படுகிறது.
காற்று பலமாக வீசும் கடலோர நகரமான சென்னையில் புகை பரப்புதல் பயனளிக்காது. ஆறுகள், கால்வாய்கள் தவிர்த்து, குடியிருப்பு பகுதிகளில் மறைந்திருக்கும் கொசுப்புழு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிய முற்படுவதில்லை. இதனால் தான் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் புகை பரப்பு
வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, கொசு புழு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க நடவடிக்கை எடுத்தால் தான் கொசுக்களை ஒழிக்க முடியும். இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் பயிற்சி அளிக்க வேண்டும். சரியான நடைமுறையை கடைப்பிடித்தால்மாதம் ரூ.15 கோடி மாநகராட்சிக்கு மிச்சமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கூறியதாவது: எம்பிபிஎஸ் மற்றும் டிபிஎச் முடித்தவர்களை தான் மண்டல சுகாதார அலுவலர்களாக நியமிக்க வேண்டும். ஆனால் ஆள் இல்லை எனக்கூறி எம்பிபிஎஸ் மட்டும் முடித்த, மருத்துவ சிகிச்சையில் அனுபவம் பெற்றவர்களை, பொது சுகாதார நடவடிக்கையில் ஈடுபடுத்துகின்றனர். அவர்களுக்கு கொசு உள்ளிட்ட பூச்சியியல் குறித்து போதிய அனுபவம் இல்லை.
அதனால் புகை பரப்புவதையே பிரதான கொசு ஒழிப்பு பணியாக மேற்கொள்ள எங்களை வலியுறுத்துகின்றனர். இந்த பணிகளை பூச்சியியல் வல்லுநர்களால் மட்டுமே திறம்பட செய்ய முடியும். ஆனால் பூச்சியியல் வல்லுநர்கள், மருத்துவர்களின் கீழ் வேலை செய்வதால், அவர்களை மீறி செயல்பட முடியவில்லை. கொசுக்களும் ஒழியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் கொசுக்களை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சியின் முன்னாள் தலைமை நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் பூச்சியியல் வல்லுநர் பி.தன்ராஜ் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை செயல்படுத்துவது மாநகராட்சியின் கடமை. மற்ற துறை சார்ந்த அனைத்து விதிகளையும் மாநகராட்சி செயல்படுத்திய நிலையில், சுகாதாரத்துறை விதிகளை மட்டும் இத்தனை மாதங்களாக செயல்படுத்தாதது ஏன்? சென்னையில் கொசு ஒழிப்பு பணியை, மாநகரின் புவியியல் அமைப்பு, உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல், வானிலை மற்றும் கடல் அலை நிலவரம், மாநகரின் நிதிநிலை இவற்றின் அடிப்படையில் திட்டமிட வேண்டும்.
உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலில், கொசுத் தொல்லை மற்றும் கொசுவால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முதலில் கொசுப்புழு ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புகை பரப்புவது அபாயகரமானது. அது மனிதர்களின் உடல் நலனை பாதிக்கும். மாநகராட்சிக்கு செலவும் அதிகம். கொசுவால் பரவும் நோய் கட்டுக்கடங்காமல் செல்லும் பட்சத்தில், கடைசி வாய்ப்பாக மட்டுமே முதிர் கொசுக்களை அழிக்க புகை மருந்துகளை பரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
புகை பரப்புவது அன்றாட கொசு ஒழிப்புபணியாக மேற்கொள்ளவே கூடாது. ஆனால் சென்னை மாநகராட்சி மட்டுமல்லாது நாட்டின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் கொசுவை ஒழிக்க முதல் மற்றும் கடைசி தீர்வாக புகை பரப்புவதை மட்டுமே செய்கின்றனர். தொடர்ந்து புகை பரப்பினால், கொசுக்களுக்கு எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். அப்போது இந்த மருந்துக்கு கட்டுப்படாது.
மருந்தின் அடர்த்தியை கூட்டினால், மனிதர்களை கடுமையாக பாதிக்கும். சென்னை மாநகரம் கடலோரப் பகுதி. எப்போதும் கடல் காற்று வீசிக்கொண்டிருக்கும். இங்கு புகை பரப்பும்போது, புகை மருந்து காற்றில் சிதைந்துவிடும். முதிர் கொசுக்களை அழிக்காது. மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் மாலத்தியான், நாளடைவில் மனிதர்களுக்கும், குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அதை சென்னை போன்ற வெயில் அதிகம் உள்ள நகரங்களில் வெளிப்புறங்களில் பயன்படுத்தக்கூடாது. சென்னையில் கொசு புழுக்களை ஒழிக்கும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். கூவம், அடையாறு போன்றவற்றின் முகத்துவாரங்களை திறந்து, கடல் நீர் ஆற்றுக்குள் வந்து சென்றாலே கொசுத்தொல்லை கட்டுக்குள் வந்துவிடும்.
எனவே மாநகராட்சி நிர்வாகம், புகை பரப்புதல் இல்லாத கொசு ஒழிப்பு கொள்கையை அறிவித்து செயல்படுத்த வேண்டும். கொசுக்களுக்கு எந்த அளவுக்கு புகை மருந்து எதிர்ப்பு திறன் உள்ளது என ஒரு ஆய்வையும் நடத்த வேண்டும்.
ஒரு காலத்தில் நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு அலுவலர், கொசு ஒழிப்பு மூலம் மலேரியா தடுப்பு பணியை மட்டுமே மேற்கொண்டு வநதார். அதன் பின்னர் மலேரியா ஒழிந்து டெங்கு அதிகரித்து, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக லெப்டோ பைரோசிஸ் போன்ற எலிக்காய்ச்சல்களும் நகர்ப்புறங்களில் அதிகரித்தது. அதை அரசு ஒப்புக்கொள்வதில் பல்வேறு அரசியல்கள் உள்ளன.
இந்த நிலையில் தான் தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகர சுகாதாரத்துறை மருத்துவம், சுகாதாரம், பொது சுகாதாரம் என பிரிக்கப்பட்டுள்ளது. மாநகர மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவமும், தலைமை நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் சுகாதாரமும், மாநகர நல அலுவலர் தலைமையில் பொது சுகாதாரமும் செயல்பட வேண்டும் என தெளிவாக வரையறுத்துள்ளது. தலைமை நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு அலுவலருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த விதிகளை பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் தயாரித்துள்ளனர். அரசிதழில் வெளிவந்து, அமலிலும் இருக்கிறது. ஆனால் சென்னை மாநகராட்சியில் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, "இது சீரியசான பிரச்சினை. கொசுக்களை ஒழிப்பதற்கான மாற்று திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...