Published : 05 Mar 2025 04:09 PM
Last Updated : 05 Mar 2025 04:09 PM

“நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்தால் மாநிலத்தின் உரிமைக் குரல் நசுக்கப்படும்” - வைகோ காட்டம்

வைகோ | கோப்புப் படம்

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக் குரலை நசுக்குவதாக அமைந்துவிடும். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை மேற்கொள்ளும்போது, விகிதாச்சார அடிப்படையில் சம பங்கு அளிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., மற்றும் பொருளாளர் மு.செந்திலதிபன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் வைகோ பேசியது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81-ன்படி மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அம்மாநிலத்தின் மக்கள் தொகையை வைத்து முடிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அம் மாநிலத்தின் மக்கள் தொகை விகிதாசாரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. 1976 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1972 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி வரையறை 2000 ஆம் ஆண்டு வரை தொடரும் என்றும் திருத்தம் கொண்டுவந்தது. ஏனென்றால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை அப்போது அமலில் இருந்தது.

இதனால் மக்கள் தொகையைக் குறைத்தால் மக்களவையில் இடங்கள் குறைந்துவிடும் என எண்ணி மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுபடுத்த தவறி விடும். எனவே, இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 84-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 2001ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 2001-ல் மக்கள் தொகை 102 கோடி. அதன்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்தால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் மாறாமல் இருந்தது. எனவே, 2003இல் வாஜ்பாய் அரசு அரசமைப்புச் சட்டக் கூறு 84 இல் திருத்தம் செய்து, அந்த நடவடிக்கையை 2026 வரை ஒத்திவைத்தது. என்றாலும் 2002-ல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, மக்களவை, மாநில சட்டமன்றங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மாறாமல், தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன.

2026 க்குப் பிறகு நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 2031-ல் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். 1971-2011 நாற்பது ஆண்டு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளத்தில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதைத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதில் பெரிய மாநிலங்கள் இடையே பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை 121 கோடி. 2021இல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொண்ட பிறகுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தெரிய வரும்.இந்த முரண்பாடான சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, மக்கள் தொகை வளர்ச்சி குறைவான தென்னிந்தியாவிற்கு மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள வடஇந்தியாவுடன் ஒப்பிட தொகுதிகளின் விகிதாச்சாரம் குறையும். பா.ஜ.க. ஆதரவு பசு வளைய மாநிலங்களில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.1911இல் அமெரிக்காவில் 9.4 கோடியாக மக்கள் தொகை இருந்தது. தற்போது 33.4 கோடி வரை வந்துள்ளது. அவர்களும் 2023 இல் மறுசீரமைப்பு செய்த போது முன்பிருந்த 435 தொகுதிகளே மாறாமல் அப்படியே இருக்கிறன.

அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில், 37 மாநிலங்களுக்கு சம விகிதாச்சாரத்தில் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. டெக்சாஸ் மாநிலம் கூடுதலாக இரு தொகுதிகளையும், பிற ஐந்து மாநிலங்கள் தலா ஒரு தொகுதியையும் கூடுதலாகப் பெற்றுள்ளன. 7 மாநிலங்கள் மட்டும் தலா ஒரு தொகுதியை இழந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு 720 உறுப்பினர்கள் உள்ளனர். 27 உறுப்பு நாடுகளுக்கும் சரிவு விகிதாச்சாரம் அடிப்படையில் (Degressive Proportionality) தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

அதே அடிப்படையில் இந்தியாவும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசனை செய்து ஒத்திசைவான முடிவை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக்குரலை நசுக்குவதாக அமைந்துவிடும். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை மேற்கொள்ளும்போது, விகிதாச்சார அடிப்படையில் சம பங்கு அளிக்கப்பட வேண்டும்.

1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட திட்டத்தை தமிழ்நாடு மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, மக்கள் தொகையை கட்டுப் படுத்தியதற்கு தண்டனையாக மறுசீரமைப்பில் நாடாளுமன்ற தொகுதி குறைவதை அனுமதிக்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை ஒன்றிய அரசு திணிப்பதால் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. அண்ணாவால் கொண்டுவரப்பட்ட இரு மொழித் திட்டம் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்” என்று வைகோ பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon