Published : 05 Mar 2025 03:46 PM
Last Updated : 05 Mar 2025 03:46 PM

''அரசு பள்ளிகள் மின் கட்டணத்தை செலுத்த நிதி ஒதுக்குவதில் அலட்சியம்'' - பள்ளி கல்வித்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

சென்னை: “அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான வகுப்பறைகள் என ஏற்கெனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான நிதி தற்போது வரை ஒதுக்கப்படவில்லை என நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசுப் பள்ளிகளுக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள், அலுவலர் பயணப்படி, மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக பிப்ரவரி மாதம் ஒதுக்க வேண்டிய நிதி தற்போதுவரை ஒதுக்கப்படாத காரணத்தினால் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்த பணத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான வகுப்பறைகள் என ஏற்கெனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத சொத்து என முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபுறம் முழங்கிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அக்கல்வியை பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளை கூட ஏற்படுத்தித் தராமல் , அதற்கு மூடுவிழா நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற கால தாமதங்கள் ஏற்படாத வகையில் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x