Published : 05 Mar 2025 03:34 PM
Last Updated : 05 Mar 2025 03:34 PM
புதுச்சேரி: “மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை ஆகியவற்றில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை முதல்வர் ரங்கசாமி தெளிவுப்படுத்த வேண்டும். ரங்கசாமி ஆதரிக்கும் விஜய் கட்சிகூட இவற்றை எதிர்க்கும் நிலையில் அவர் மவுனம் காக்கலாமா?” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும் எம்.பியுமான வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. இன்று (மார்ச் 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் நமது உரிமைகளை இழக்கும் நிலை ஏற்படும். இதை சுட்டிக்காட்டி தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தென்னிந்திய முதல்வர்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் வழக்கம் போல புதுவை முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து வருகிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் கோவா, அருணாச்சல பிரதேசங்களுக்கு இணையாக புதுச்சேரியும் உள்ளது. ஆனால் கோவா, அருணாச்சல பிரதேசத்தில் 2 மக்களவை உறுப்பினர்களும், தலா ஒரு மாநிலங்களை உறுப்பினரும் உள்ளனர். புதுவையில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர்தான் உள்ளார். இதுமட்டுமின்றி, கோவாவுக்கு 40 எம்எல்ஏ, அருணாச்சல பிரதேசத்துக்கு 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். புதுவையில் 33 எம்எல்ஏக்கள் மட்டும்தான் உள்ளனர்.
இதனால் புதுவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை 2 ஆகவும், எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை 40 ஆகவும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை முதல்வர் எழுப்ப வேண்டும். சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தென்னிந்திய மாநில முதல்வர் கூட்டமைப்பில் புதுவையையும் முதல்வர் ரங்கசாமி இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலத்தில் வரி வருவாய் இழப்பு, உரிமை இழப்பு ஆகியவை ஏற்படும். எதிர்கட்சியாக உள்ள புதுவை திமுகவினர் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்.
ஏற்கெனவே மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. புதுவையில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ அமல்படுத்தியதன் மூலம் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் தமிழகத்தோடு இணைந்து புதுவையும் குரல் கொடுக்க வேண்டும். புதுவையை காட்டிக்கொடுத்து மொழி, உரிமை அழிய முதல்வர் காரணமாக இருந்துவிடக்கூடாது. ஆவர் ஆதரிக்கும் விஜய் கட்சிக்கூட இவ்விஷயங்களை எதிர்க்கின்றனர். அவரது ஆசிர்வாதம் உள்ள கட்சிக்கூட இம்முடிவை எடுத்துள்ள நிலையில், ரங்கசாமி மவுனம் காப்பது காட்டிக்கொடுப்பதை போன்றது.
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில், 6 முதல் 8-ம் வகுப்பு வரைதான் மும்மொழிக்கொள்கை உள்ளது. இந்தி இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதை தெளிவுப்படுத்துகிறேன். மும்மொழி கொள்கையில் புதுச்சேரி அரசு நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும், தொகுதி வரையரை குறித்தும் குறிப்பிடவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் வந்தால் புதுச்சேரிக்கு இரண்டு எம்.பி. தொகுதி தேவை. புதுச்சேரி பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். தென்னிந்திய முதல்வர்கள் இணையும்போது நாமும் இணைவது அவசியம். இவ்விஷயத்தில் இண்டியா கூட்டணி இணைந்து செயல்படுவோம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...