Published : 04 Mar 2025 06:20 AM
Last Updated : 04 Mar 2025 06:20 AM
சென்னை: திமுக செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்களை அடுத்த ஓராண்டில், ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை முகாம் அலுவலகத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியின் திருமணத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தொடர்ந்து மணவிழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இன்னும் ஒரு ஆண்டில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கு நாம் இப்போதில் இருந்தே தயாராக வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றார் என்பதை அடுத்த ஓராண்டு, ஒவ்வொரு வாக்காளராக சந்தித்து, நாம் எடுத்துச்சொல்ல வேண்டும்.
குறிப்பாக மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு விடியல் பயணம் என பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி செயல்படுத்தி இருக்கிறார்.
இந்த திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டுமென்றால், இதுபோன்ற பல நல்ல திட்டங்கள் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதியாவது நாம் இலக்காக நிர்ணயித்து ஜெயித்து காட்ட வேண்டும்.
அதற்கு முன்மாதிரியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் வெற்றி அமைய வேண்டும். எனவே உங்களில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவருடைய வெற்றிக்கு உழைத்து, வெற்றியை நீங்கள் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...