Published : 21 Jul 2018 10:20 AM
Last Updated : 21 Jul 2018 10:20 AM

ரயில் நிலையங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: மதுக் கடைகளை மூட அரசுக்கு ஆர்பிஎப் வலியுறுத்தல்

ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அவற்றை மூடுமாறு தமிழக அரசை வலியுறுத்தி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) கடிதம் எழுதியுள்ளது.

நாடுமுழுவதும் ரயில் விபத்து களால் ஆண்டுதோறும் சராசரி யாக 25 ஆயிரம் பேர் இறப்பதாக தேசிய குற்றப் பதிவு காப்பகம் தெரிவித்துள்ளது. ரயில் மோதி யும், ரயிலில் இருந்து தவறி விழுந்தும் பலர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்கள் மூலம் ரயில் பாதைகளைக் கடந்து செல் வது, செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளம் அருகே நடந்து செல்வது உள்ளிட்ட கார ணங்களால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க, மத்திய ரயில்வேத் துறை பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுச்சுவருடன் ரயில்வே கேட்கள் அமைத்தல், சுரங்கப்பாதை கள் அமைத்தல், மேம்பாலம் கட்டு தல், தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்துவது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக ரயில் நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளால் ரயில்பாதைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை ரயில் கோட்டத்தில் மட்டும் சைதாப்பேட்டை, பழவந் தாங்கல், வியாசர்பாடி ஜீவா, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், அன்ன னூர், மயிலாப்பூர், பெருங்குடி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை என மொத்தம் 14 ரயில் நிலையங் களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது வாங்கிக்கொண்டு ரயில் பாதையில் அமர்ந்து குடிப்பது, பின்னர் தண்டவாளத்தைக் கடக்க முயல்வது, அல்லது அங்கேயே படுத்துக் கிடப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் அவர் கள் ரயில் விபத்துகளில் சிக்கி பலியாகிறார்கள்.

இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை யின் (ஆர்பிஎப்) மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:

ரயில்வே போலீஸும் , ரயில்வே பாதுகாப்புப் படையும் இணைந்து ரயில்பாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதவிர, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகி றோம். பள்ளி, கல்லூரி மாணவர் கள் விதிமுறைகளை மீறி செயல் படும்போது வீடியோ பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல் லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பு வதுடன், அந்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ரயில்பாதையில் ஏற் படும் இறப்புகளுக்கு செல்போன் பேசிக்கொண்டே ரயில்பாதையை கடத்தல், தண்டவாளம் அருகே அமர்ந்து மது குடித்து மயங்கி விழுதல் உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கின்றன. சென்னை ரயில் கோட்டத்தில் மட்டும் 14 ரயில் நிலையங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. எனவே, இந்த கடைகளை மூட வேண்டுமென தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x