Published : 01 Mar 2025 06:35 AM
Last Updated : 01 Mar 2025 06:35 AM

பெரிய நிறுவன மருந்தகங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகள் தயக்கம்: மருந்து வணிகர்கள் குற்றச்சாட்டு

கோப்புப் படம்

சென்னை: பெரிய நிறுவன மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்த தயக்கம் காட்டுகின்றனர் என்று மருந்து வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 42,000 சில்லறை மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் உள்ளன.

மருத்துவர் பரிந்துரையின்றி கருத்தடை மற்றும் தூக்க மாத்திரை வழங்குதல், வாங்கிய மாத்திரைகளுக்கு உரிய ரசீது தராதது மற்றும் ஆவணங்கள் பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 88 வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிறிய கடைகளில் மட்டுமே ஆய்வு நடத்துகின்றனர். பெருநிறுவன மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் நடக்கும் தவறுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மருந்து வணிகர்கள் கூறுகையில், “மருந்து கட்டுப்பாட்டு துறையின் தொடர்ச்சியான நடவடிக்கையால் 42,000 விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தவறு செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சிறிய தவறுக்கும் வழக்குப் பதிவு செய்வது, அபராதம் விதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

பெரிய நிறுவன மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் தயக்கம் காட்டுகின்றனர். மருந்து வணிகர்களின் கடைகளில் மட்டும் தேவையற்ற சோதனை நடத்தி, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x