Published : 28 Feb 2025 07:49 AM
Last Updated : 28 Feb 2025 07:49 AM

சம்மனை கிழித்ததாக பணியாளர் கைது: சீமான் வீட்டின் பாதுகாவலரை இழுத்து சென்றது போலீஸ் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்டப்​பட்ட சம்மன் கிழிக்​கப்​பட்ட விவகாரத்​தில், பாது​காவலரை போலீஸார் இழுத்​து சென்​ற​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு உத்தர​விட்​டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்​பிட்​டபடி சீமான் காவல் நிலை​யத்​தில் ஆஜராக​வில்லை.

இதையடுத்து, நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் நேற்று மீண்​டும் சம்மன் ஒட்டப்​பட்​டது. அதில், பிப். 28-ம் தேதி (இன்று) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. சிறிது நேரத்​தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்​தெறிந்​தார். இதையடுத்து, அவரைக் கைது செய்​வதற்​காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்​ராஜேஷ் மற்றும் போலீ​ஸார் நேற்று பிற்​பகல் சீமான் வீட்டுக்குச் சென்​றனர்.

அப்போது, சீமான் வீட்​டில் பாது​காவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு​பெற்ற எல்லை பாது​காப்புப் படை வீரர் அமல்​ராஜ், போலீ​ஸாரை வீட்​டின் உள்ளே ​விடாமல் தடுத்து நிறுத்​தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்​கொண்டு உள்ளே சென்​றார். அப்போது, இரு தரப்​பினரிடையே தள்ளு​முள்ளு ஏற்பட்டது.

துப்பாக்கி பறிமுதல்: இதையடுத்து, அமல்​ராஜை போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தால், அவர்​களிடையே மோதல் ஏற்பட்​டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீ​ஸார் அமல்​ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்​துச் சென்று, காவல் துறை ஜீப்​பில் ஏற்றினர்.

இதற்​கிடை​யில், பாது​காவலர் அமல்​ராஜ் வைத்​திருந்த கைத்​துப்​பாக்​கியை நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு அவரிட​மிருந்து போலீ​ஸார் பறிமுதல் செய்​தனர். மேலும், சம்மனை கிழித்​ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கயல்​விழி முறை​யீடு: இந்த சம்பவம் நடந்த​போது சீமான் மனைவி கயல்​விழி வீட்​டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடு​மாறு முறை​யிட்​டார். கைது செய்​யப்​பட்ட அமல்​ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவி​யாளர் தாக்​கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்​பேட்டை அரசு மருத்​து​வமனை​யில் அனும​திக்​கப்​பட்​டனர். இதற்​கிடை​யில், சீமான் வீட்​டில் குவிந்த நாம் தமிழர் கட்சி​யினர், போலீ​ஸார் அத்து​மீறி நுழைந்​த​தாகப் புகார் தெரி​வித்து கோஷமிட்​ட​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

இதுகுறித்து அமல்​ராஜின் மனைவி கூறும்​போது, “25 ஆண்டு​களாக எனது கணவர் எல்லைப் பாது​காப்புப் படையில் பணிபுரிந்​தார். அவர் உரிமம் பெற்ற துப்​பாக்​கியை வைத்​துள்ளார். கடந்த 2 ஆண்டு​களாக சீமானிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் போலீ​ஸாரை தாக்க​வில்லை. அவர்​கள்​தான் எனது கணவரை தாக்​கினர். மேலும், போலீ​ஸாரிடம் துப்​பாக்​கியை ஒப்படைக்கவே முயன்​றார். அவரை கிரிமினல் குற்​றவாளி போல இழுத்​துச் சென்றது நியாயமா?” என்றார்.

அரசியல் காரணங்கள்… சீமான் வழக்​கறிஞர் ரூபன் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “சீமான் வீட்​டில் பெட்​ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் வந்த​தால்​தான், பாது​காவலர் துப்​பாக்கி வைத்​திருந்​தார். அரசியல் காரணங்​களுக்​காகத்​தான் சீமானுக்கு நெருக்கடி கொடுக்​கப்​படு​கிறது” என்றார்.

சீமான் வழக்​கறிஞர் சங்கர், வளசர​வாக்கம் காவல் நிலை​யத்​தில் அளித்த கடிதத்​​தில், விசா​ரணையை 4 வாரங்​களுக்கு தள்ளிவைக்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கர் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “உயர் நீதி​மன்றத் தீர்ப்பை எதிர்த்து, சீமான் உச்ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​துள்ளார். அது விரை​வில் ​விசா​ரணைக்கு வர உள்​ளது. வெளியூர் நிகழ்ச்​சிகளில் சீ​மான் பங்​கேற்​ற​தால்​தான் ​காவல் நிலை​யத்​தில் ஆஜராக ​முடிய​வில்லை​” என்றார்.

கட்டாயப்படுத்தினால் ஆஜராக மாட்டேன் என்ன செய்ய முடியும்? - சீமான் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: என் மீது நடிகை தெரிவித்த புகார் குறித்து, நான்தான் வழக்கு தொடர்ந்தேன். இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டு
களாக அந்த நடிகை வெளியே வரவில்லை. திமுகவால் என்னை சமாளிக்க முடியவில்லை என்பதால், இந்த விவகாரத்தை பரபரப்பாக்கி உள்ளனர். நான் உடனடியாக ஆஜராக வேண்டிய அவசியம் என்ன?

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (நேற்று) விசாரணைக்கு என்னால் வர முடியாது. சென்னை வந்த பிறகு காவல் நிலையம் வருகிறேன் என்று கூறினேன். நான் ஓசூரில் இருப்பது போலீஸாருக்குத் தெரியும். ஆனாலும் என் வீட்டில் சம்மன் ஒட்டி அவமானப்படுத்த முயல்கின்றனர். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன். ஆனால், கட்டாயப்படுத்தினால் என்னால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது. என்னை என்ன செய்துவிட முடியும். இவ்வாறு சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x