Published : 28 Feb 2025 06:16 AM
Last Updated : 28 Feb 2025 06:16 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 1002 இடங்களில் ரூ.739 கோடியில் புதிதாக பொதுக் கழிப்பிடங்கள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சியின் கடன், அதற்கான வட்டி தொகை எவ்வளவு என மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் (பாஜக) கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ``மாநகராட்சிக்கு ரூ.1488.50 கோடி கடன் உள்ளது; அதற்காக மாதாந்திர வட்டியாக ரூ.8.5 கோடி செலுத்தப்படுகிறது'' என்றார்.
தொடர்ந்து, சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, புது கடற்கரை ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை ரூ.11.63 கோடியில் தனியார் மேற்கொள்ள அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழில் உரிம கட்டணத்தை குறைக்குமாறு வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்காக, தொழில் உரிம அட்டவணை பட்டியலில் விடுபட்ட வணிகர்களை சேர்க்கவும், 500 சதுர அடிக்குள் உள்ள மளிகைக் கடைக்கான தொழில் உரிமக் கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை ரூ.30 கோடியில் நவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வணிக கடைகளுக்கான குத்தகைக் காலத்தை 12 ஆண்டாக உயர்த்தவும், மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் செலுத்தத் தவறினால் 12 சதவீதம் தனிவட்டி வசூலிக்கவும், ஆண்டுதோறும் 5 சதவீதம் வாடகையை உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தின் கீழ், சாலைக்கு அப்பால் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20, முதன்மை சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு தலா ரூ.60 கட்டணம் நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை, திரு.வி.க.நகர் பகுதிகளில் சோதனை அடிப்படையில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட நவீன பொது கழிப்பறைகள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதே போன்று வட சென்னையில் ரூ.226 கோடியில் 285 இடங்களிலும், மத்திய சென்னையில் ரூ.278 கோடியில் 395 இடங்களிலும், தென் சென்னையில் ரூ.235 கோடியில் 322 இடங்களிலும் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
மொத்தம் ரூ.739 கோடியில் 1002 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைத்து 9 ஆண்டுகளுக்கு பராமரிக்க மாமன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மந்தைவெளியின் 5-வது குறுக்குத் தெருவுக்கு, நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தை 'எஸ்.வி.வெங்கடராமன் தெரு' எனப் பெயர் சூட்டவும், மாநகராட்சியில் இயங்கி வரும் 168 இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களை மூடவும் அனுமதி வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment