Published : 28 Feb 2025 07:00 AM
Last Updated : 28 Feb 2025 07:00 AM
சென்னை: விமான நிலையம் அமைக்க பரந்தூரை, தமிழக அரசுதான் தேர்வு செய்து தந்தது. அங்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால், அதுகுறித்து மாநில அரசுதான் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
நாடு முழுவதும் விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் உணவு விலை பல மடங்கு அதிகம் உள்ளதாக புகார் எழுந்ததால், விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்களை திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, நாட்டில் முதல்முறையாக கொல்கத்தா விமான நிலையத்தில் ‘உடான் யாத்ரி கஃபே’ கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நாட்டின் 2-வது ‘உடான் யாத்ரி கஃபே’ மலிவு விலை உணவகத்தை, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டின் 4-வது பெரிய விமான நிலையம் சென்னை. இங்கு இன்னும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால், இங்கு மற்றொரு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே பணிகள் முடிந்து, முதல்கட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி கடந்த 2023-ல் திறந்து வைத்தார். இதன் 2-வது கட்டத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையின் 2-வது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பது குறித்து பல ஆண்டுகளாகவே ஆலோசனை நடந்து வருகிறது. மத்திய அரசை பொருத்தவரை, மாநிலத்தில் பல விமான நிலையங்களை அமைக்க விரும்புகிறது. ஆனால், விமான நிலையங்கள் அமைப்பதற்கான தகுதியான நிலங்களை தேர்வு செய்வது மாநில அரசின் கடமை. மாநில அரசு தேர்வு செய்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, சாத்தியக்கூறு ஆய்வு நடத்தி, விமான நிலையம் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்குகிறது.
அதேபோல, சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க பரந்தூரை, மாநில அரசு தேர்வு செய்து தந்தது. தற்போது அதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அங்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால், அதுகுறித்து மாநில அரசுதான் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் தொடர்பான பிரச்சினைகளை மாநில அரசுதான் சமாளிக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தை தனியார்மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை.
விமான பயண டிக்கெட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், விமான கட்டணம் தானாக குறையும். எனவே, உடான் திட்டத்தில் பல புதிய விமான நிலையங்களை உருவாக்குவது, அதிக விமான சேவைகளை தொடங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
விமான சேவைகளை நடத்துவது குறித்து வெளிநாடுகள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறப்படும் தகவல் சரியல்ல. வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
வேலூர், நெய்வேலியில்… - தமிழகத்திலேயே அதிக தேவை உள்ள விமான நிலையம் கோவை. அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். தமிழகத்தில் உடான் விமான சேவைகள் திட்டத்தில் முதல்கட்டமாக, சேலம், வேலூர், நெய்வேலிக்கு விமான சேவை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சேலத்துக்கு ஏற்கெனவே விமான சேவை உள்ளது.
சென்னையில் இருந்து வேலூருக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் சென்னை- வேலூர் இடையே, விமான சேவைகள் தொடங்கப்பட்டு, வேலூர் விமான நிலையமும் செயல்பாட்டுக்கு வரும். நெய்வேலியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment