Published : 28 Feb 2025 06:48 AM
Last Updated : 28 Feb 2025 06:48 AM

ஆதரவற்ற மனநலம் பாதித்தவர்களுக்கான மாநில கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

சென்னை: ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழ்நாடு மாநில கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்க தேவையான சிறப்பான உள்கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. அதைக் கொண்டு, மக்களுக்கு கட்டணமின்றி மனநல சேவைகளை அரசு வழங்கி வருகிறது.

ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு மாநில கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். இதில், ஆதரவற்று பொது இடங்களில் உலவும் மனநோயாளிகளை அடையாளம் கண்டு மீட்பது உட்பட முழுமையான மனநல மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்த நெறிமுறைகள், பயனாளிகளின் நலன், உரிமைகளை மையமாக கொண்ட அணுகுமுறை, இந்த சேவையில் அரசு துறைகள் இடையிலான ஒருங்கிணைப்பு, பல்வேறு துறை அலுவலர்களின் பொறுப்புகள் தொடர்பான விரிவான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை, இடைநிலை மருத்துவ கவனிப்பு, நீண்டகால பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைதல் ஆகிய 4 நிலைகளிலான கவனிப்பை இக்கொள்கை வரையறுத்துள்ளது. இந்த சேவைகளை செயலாக்கத்துக்கு கொண்டு வருவதை மேற்பார்வையிட மாநில மனநல ஆணையத்துக்கும், மாவட்ட அளவில் கண்காணிக்க மாவட்ட மனநல குழுவுக்கும பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘கலங்கரை’ மறுவாழ்வு மையங்கள்: தனி மனிதரின் ஆரோக்கியம், குடும்ப நலம், சமூக வளர்ச்சிக்கு போதைப் பொருள் பயன்பாடு பெரிய தடையாக உள்ளது. போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் அவர்கள் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த துறை மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ரூ.15.81 கோடி செலவில் ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னையில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் அதில் இருந்து மீட்க இங்கு கட்டணமின்றி தொடர் சிகிச்சை வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x