Published : 28 Feb 2025 06:45 AM
Last Updated : 28 Feb 2025 06:45 AM

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.776 கோடியில் 1,510 குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.776.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.657.09 கோடி மதிப்பில் 2,649 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், ரூ.181.74 கோடியில் 401 அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.56.31 கோடியில் 1603 மனை மேம்பாட்டு திட்டம், ரூ.117.17 கோடியில் 10 வணிக வளாகங்கள், ரூ.67.32 கோடியில் 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்துக்கு ரூ.10.88 கோடியில் 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டம், செனாய் நகரில் ரூ.131.27 கோடியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் ரூ.51. 29 கேடியில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம், இராஜகுளிப்பேட்டையில் ரூ.43.81 கோடியில் 116 அடுக்குமாடி குடியிருப்புகள்; சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ரூ.433.59 கோடியில் 570 அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டம், செங்குளத்தில் ரூ.116.55 கோடி செலவில் 464 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.776.51 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அறநிலையத்துறை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.13 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் – கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் அறங்காவலர் குழுத் தலைவர் கோ.இராமகிருஷ்ணனிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் உள்ள 225 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.8 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் தக்கார் மற்றும் உதவி ஆணையர் வே.சுரேஷிடம் வழங்கினார். அதேபோல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.6 கோடிக்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, தலைமை செயலர் நா.முருகானந்தம், வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா, அறநிலையத்துறை செயலர் க.மணிவாசன், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.பழனி, ந.திருமகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x