Published : 02 Jul 2018 06:47 PM
Last Updated : 02 Jul 2018 06:47 PM

யூ டியூப்பில் பார்க்கும் அவலத்தில் தோல்பாவைக் கூத்துக் கலை: பாரம்பரியக் கலையைக் காப்பாற்ற அரசு கைகொடுக்குமா?

வெண் திரையில் தோல்பாவை வடிவங்களை நூலில் கட்டிக்கொண்டு ஆட்டுவித்து கூத்து காட்டுவது தோல்பாவைக் கூத்து. தமிழகத்தில் 1980-ம் ஆண்டிற்கு முன் டிவி, தியேட்டர்கள் பரவலாக வராத காலத்தில் இந்த தோல்பாவைக் கூத்துதான், இன்றைய ‘பிக்பாஸ்’அளவிற்கு பிரபலம். திருவிழாக்கள் காலங்களில் தோல்பாவைக் கூத்து அன்றைய மக்களுடைய முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. தற்போது அதற்கான ரசிகர்களும், இந்தப் பாரம்பரியக் கலையை பற்றிய முக்கியத்துவமும் தெரியாததால் தோல்பாவைக் கூத்துக் கலைக்கான வரவேற்பு குறைந்து தற்போது இந்தக் கலை அழியும் தருவாயில் உள்ளது.

முன்பு 3 ஆயிரம் குடும்பத்தினர், தொழில் முறையாக இந்தக் கலையை செய்து வந்தனர். தற்போது வெறும் 30 குடும்பத்தினர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் இந்தத் தொழிலில் நிரந்தர வருவாய் கிடைக்காமல் வாழ்வாதாரத்திற்காக நலிவடைந்து போய் மாற்றுத்தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அழியும் கலைகளுக்கு அரணாக இருக்க வேண்டிய கலைப் பண்பாட்டு துறையும் கை தூக்கிவிடாமல் ஒதுங்கி நிற்பதால் தோல்பாவைக் கூத்துக் கலையை இந்த தலைமுறையினர் யூ டியூப்பில் மட்டுமே பார்க்கும் அவலம் உள்ளது.

தேனி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்து லெட்சுமணராவ் மற்றும் அவருடன் வந்த கலைஞர்களும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகராவை சந்தித்து, பாரம்பரியமிக்க இந்தக் கலையை காப்பாற்றக் கோரி மனு கொடுத்தனர்.

முத்து லெட்சுமணராவ் கூறுகையில், ‘‘நாங்கள் 5 தலைமுறையாக இந்த தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியை நடத்துகிறோம். ராமாயணம், மகாபாரதம் முதல் பாரம்பரியக் கதைகளையும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் அப்படியே சினிமா போல் பார்வையாளர்கள் கண் முன் நிறுத்துவோம். பத்து தலை ராவணன் ஒவ்வொரு தலையாக வெட்டப்பட்டு விழும் காட்சியை இந்த தோல்பாவைக் கூத்து கலையில் ரசிப்போருடைய நினைவை விட்டு அவ்வளவு எளிதில் மறையாது. வெண் திரையில் காட்டப்படும் கதாபாத்திரங்களுக்கும், கதைகளுக்கும், அதன் அசைவுகளுக்கும் ஏற்ப நாங்கள் பின்னணியாகக் கொடுக்கும் குரல்கள், இந்தக் கலையைப் பார்க்கும் ரசிகர்களை மெய்மறக்க வைக்கும்.

உடல்நலம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி போன்ற சமூக பொறுப்புகளைத் தாங்கியும் இந்தத் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். திருவிழாக்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிப்போம். அது நிரந்தர வருவாய் கிடையாது. அவ்வப்போது அரசு பள்ளிகளில் இந்த கூத்துகளை நடத்த மாணவர்களிடம் 5 ரூபாய், 10 ரூபாய் வசூல் செய்து கொடுப்பார்கள். அதுதான், எங்கள் வயிற்றுப்பசியைப் போக்கி வருகிறது. தற்போது டிவி, சினிமாக்களை பார்த்து மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது பராம்பரிய கலைகளுக்கு மவுசு ஏற்பட ஆரம்பித்துள்ளது. அதை அப்படியே அழியாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவேண்டும். இந்தத் தலைமுறையினரும் ரசிக்க ஆரம்பித்துள்ளதால் தோல்பாவைக் கூத்துக் கலையை பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளாக நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கு பள்ளிக் கல்வித்துறையும், கலைப் பண்பாட்டுத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது ‘தூய்மை இந்தியா’, ‘தனி நபர் கழிப்பறை’, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற அரசு சுகாதார திட்டங்களையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தோல்பாவைக் கூத்து வழியாகக் கொண்டு சென்றால் கிராம மக்களையும், பள்ளி மாணவர்களையும் இன்னும் எளிதாக சென்றடைய வாய்ப்புள்ளது’’ என்றார் முத்து லெட்சுமணராவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x