Published : 27 Feb 2025 07:57 AM
Last Updated : 27 Feb 2025 07:57 AM
சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 25 மருத்துவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மவுலானா, சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் இன்றைக்கு இந்தியாவின் மருத்துவ தலைநகராக இருக்கிறது என்றால், அதற்கு திமுக ஆட்சி காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புதான் காரணம்.
இந்த கட்டமைப்பு சரியான முறையில் செயல்பட வேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றதுபோல மருத்துவர்கள் தேவை. அதுவும் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணி பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ள கூடிய மருத்துவர்கள் தேவையாகும்.
கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களில் இருந்தும் மருத்துவர்கள் உருவானால்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். அதை புரிந்துகொண்டுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.
இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களில் இருந்துகூட இத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் கருணாநிதி. அவரது வழியில், திமுக அரசு மருத்துவ கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் உருவாக்கியிருக்கிறோம்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து இருக்கிறது. “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைத்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அவசியமான தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத்தான் முதல்வர் மருந்தகங்கள் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
மக்களின் உயிர் காக்கும் சேவை: இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்டும் என்று திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்றால், உங்களை போன்ற மருத்துவர்களின் பங்களிப்புதான் அதில் மிக மிக முக்கியம். நீங்கள் செய்யப்போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்கும் சேவை. சமுதாயத்துக்கான மிகப் பெரிய தொண்டு. இனி, மக்கள் உங்களை நம்பி தங்கள் உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்கஇருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, உங்களுடைய சேவை அமையவேண்டும். மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள். உங்களுடைய நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது. உயிர்களை காக்கும் தொண்டாற்ற போகும் உங்களுக்குத் தேவையானவற்றை நிச்சயம் செய்வேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment