Published : 27 Feb 2025 07:10 AM
Last Updated : 27 Feb 2025 07:10 AM

“அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும்...” - தவெக 2-ம் ஆண்டு விழாவில் விஜய் பேசியது என்ன?

தவெக எளிய மக்களுக்கான கட்சி, பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவதே முதல் பணி என்று தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், கொள்கை பரப்பு செயலாளர் தாஹிரா, பொருளாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை பொது செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் விஜய் பேசியதாவது: அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர் பின்னால் நின்றது இளைஞர்கள் தான். 1967 மற்றும் 1977-ல் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது அவர்களால்தான். தவெக எளிய மக்களுக்கான கட்சி. மக்கள் நலன், நாட்டு நலன் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலைவிட்டே அகற்றுவதுதான் நம் முதல் வேலை.

மும்மொழி கொள்கை விஷயத்தில் குழந்தைகள் போல இந்த பாசிசமும் பாயாசமும், அதாவது நமது அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் மாறி மாறி சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியையும் கற்கலாம். ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக, ஒரு மாநில அரசின் மொழி கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால் அதை ஏற்க முடியாது. மும்மொழிக் கொள்கையை தவெக உறுதியாக எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "அடுத்த 63 வாரங்களுக்கு தவெக தான் எதிர்க்கட்சி, விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர். தமிழகத்தில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும். அதற்கு அஜென்டா, திட்டம் எல்லாம் ரெடி. இன்னும் பலர் தவெகவுக்கு வரப்போகிறார்கள்" என்றார்.

பிரசாந்த் கிஷோர் பேசும்போது, "விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல. தமிழகத்தின் புதிய நம்பிக்கை. புதிய அரசியலை விரும்பும் கோடிக்கணக்கானோருக்கான இயக்கம் தவெக. மாற்றத்தை கொண்டு வரும் இலக்கை நிர்ணயிக்க நானும் சிறிதளவு உதவ இருக்கிறேன்" என்றார்.

இதற்கிடையே, விழா நடந்த அரங்கத்தின் வெளியே விஜய்யை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த விஜய், திறந்த வேனில் நின்றபடி அங்கிருந்தவர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்: முன்னதாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ‘கெட் அவுட்’ என்ற ஹேஷ்டேக் அடங்கிய கையெழுத்து இயக்கத்தை விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதேநேரத்தில், எக்ஸ் தளத்தில் ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக் இந்திய அளவில் நேற்று ட்ரெண்டானது.

செய்தியாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல்: தவெக 2-ம் ஆண்டு விழா தொடர்பான செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள், நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தினுள் செல்வ முயன்றபோது அங்கிருந்த விஜய்யின் பவுன்சர்கள் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது, செய்தியாளர் இளங்கோவனை பவுன்சர்கள் தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து விழுந்தார். இதில், மார்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பத்திரிகையாளர் அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x