Published : 27 Feb 2025 06:16 AM
Last Updated : 27 Feb 2025 06:16 AM

தனியார் மூலம் மாநகர பேருந்து இயக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்​தினர் ஆர்ப்​பாட்டம்

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் கூறியதாவது: சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 600 பேருந்துகளை வாங்கி தனியார் மூலம் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால், பெண்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கான இலவச பயணம் ரத்தாகும்.

மேலும், 600 பேருந்துகளுக்கான ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப ஊழியர்கள் என 2 ஆயிரம் பணியிடங்கள் தனியார்மயமாகும். இடஒதுக்கீடும் பறிபோகும். சென்னையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

எனவே, அரசுப் பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்க மாட்டோம். ஒப்பந்தம் கோரியுள்ள அறிவிப்பை, மார்ச் 10-ம் தேதிக்குள் கைவிட வேண்டும். இல்லையெனில், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x