Published : 26 Feb 2025 01:01 PM
Last Updated : 26 Feb 2025 01:01 PM
சென்னை: தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: “1967, 1977 தேர்தல்களை போல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் 2026 தேர்தலில் உருவாக்குவோம். இந்த அரசியலை பொறுத்தவரை யார், யாரை எதிர்ப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. இங்கு நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள்.
ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும். இதுவரை நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் நமக்கு ஓட்டு போட்டார்களே, ஆனால் இவன் சொல்வது மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, இவனை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று நினைக்கின்றனர்.
அதில் என்ன பேசுவதென்று தெரியாமல், வர்றவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுவதைப் போல. இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், வரும் எதிர்ப்புகளை இடது கையால் தள்ளிவிட்டு நம்முடைய தவெக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் எல்லாருமே இளைஞர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர். அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதில் இருந்தவர்கள் இளைஞர்கள்தான். அதுதான் வரலாறு. கட்சி நிர்வாகிகள் எல்லாருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்திருக்கிறார்கள். நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்.
மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ கவலையில்லாமல் வெறும் பணம் பணம் மட்டும்தான். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை.” இவ்வாறு விஜய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...