Published : 14 Jul 2018 08:07 PM
Last Updated : 14 Jul 2018 08:07 PM
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்புலவில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் சனிக்கிழமை 500-வது நாளை எட்டியது.
இலங்கையின் வட மாகணாத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரால் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு பகுதி மக்கள் புலம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இந்தப் பகுதியை ராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்தாலும் தொடர்ந்து கேப்பாப்புலவு மக்கள் வவுனியா செட்டிகுளம் மற்றும் மனிக்பாம் அகதி முகாம்களில் தற்காலிகக் குடியிருப்பை உருவாக்கி இலங்கை மகிந்த ராஜபக்சேவின் அரசு குடியமர்த்தியிருந்தது.
2015 ஜனவரியில் மகிந்த ராஜபக்சேவிற்குப் பின்னர் மைத்திரிபால சிறிசேனா அதிபராக பதவியேற்ற பின்னர் வட மாகாணங்களில் சிறிது சிறிதாக முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 01.03.2017 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இலங்கை ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை விடுவிக்க வலியுறுத்தி ராணுவ முகாமிற்கு எதிராக சிறிய கூடாரங்கள் அமைத்து அமைதிப் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காத நிலையில், இப்போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 500-வது நாளை எட்டியது.
சனிக்கிழமை நடைபெற்ற 500-வது நாளில் கலந்துகொண்ட மக்கள் கேப்பாப்புலவில் 135 குடும்பங்களுக்குச் சொந்தமான 480 ஏக்கர் நிலங்களை ராணுவத்தினர் திரும்பவும் தங்களிடம் திருப்பித் தரவேண்டும். சொந்த நிலத்திற்காக வீதியில் எத்தனை நாட்கள் நின்று போராடுவது, 500 நாட்கள் ஆகியும் தீர்வு கிடைத்த பாடில்லை. விரைவில் ராணுவம் எங்களின் நிலங்களை விடுவிக்காவிட்டால் ராணுவத்தின் அனுமதியின்றி எங்கள் சொந்த நிலங்களுக்குச் சென்று குடிபுகுவோம் என தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கரைத்துறைப்பற்று நகராட்சி தலைவர் கனகையா தவராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, கடந்த 500 நாட்களாக நடைபெற்று வரும் கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்தின் போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்துகிற பல்வேறு அரசியல் அமைப்புகளும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT