Published : 24 Feb 2025 05:30 AM
Last Updated : 24 Feb 2025 05:30 AM
சென்னை: சென்னை நங்கநல்லூர் திஹா கிளினிக் சார்பில் ஆரோக்கியமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை வலியுறுத்தி மூத்த குடிமக்களின் விழிப்புணர்வு நடைப்பயணம் நேற்று நடைபெற்றது.
‘ஆரோக்கியமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்பதை வலியுறுத்தி திஹா கிளினிக், நங்கநல்லூர் மூத்த குடிமக்கள் மன்றம், நங்கநல்லூர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ‘நடங்க நல்லூர்’ என்ற விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை நங்கநல்லூரில் நேற்று நடைபெற்றது. சுமார் 2 கிமீ தூரத்துக்கு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
நங்கநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மலிவு விலையில் உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் திஹா கிளினிக்கின் ஒரு முயற்சியாக இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. நாம் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சிகள் மூலம் மூத்த குடிமக்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மேலும் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களையும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாக இது நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மூத்த குடிமக்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.ராமாராவ் பேசுகையில், “காலை வேளையில் நூற்றுக்கணக்கான மூத்த குடிமக்கள் உற்சாகமாக நடைப்பயிற்சி செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. முதியோர்களுக்கான உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்கையை வாழ நாம் அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்போம்.” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து திஹா அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீனிவாசகோபாலன் சாரி பேசுகையில், “திஹா கிளினிக் சார்பில் நங்கநல்லூர் பகுதிகளில் இலவச பரிசோதனை முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
இதன்மூலம் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருகிறோம். அந்தவகையில் இந்த நடைப் பயணமானது சுற்றியுள்ள சமூகத்தின் மீதான அக்கறையை காட்டும் வகையில் தீஹாகவின் மற்றுமொரு முன்னெடுப்பாகும்.” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment