Published : 23 Feb 2025 12:03 PM
Last Updated : 23 Feb 2025 12:03 PM

“இணையத்தில் அடையாளங்களை மறைத்து பெண்களை ஏமாற்றுகின்றனர்” - சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு

இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து, பெண்களை ஏமாற்றுகின்றனர் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 6-வது சர்வதேச மற்றும் 45-வது இந்திய குற்றவியல் மாநாட்டில் பங்கேற்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தகவல் தொழில்நுட்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியதாவது: பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறைவதாக இல்லை. பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு பெண்கள் உள்ளாகின்றனர். பொதுவெளி, கல்விக் கூடம், பணிபுரியும் இடம், ஏன் வீடுகளில்கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இணையத்தில் கூட பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. கேலி செய்வது, வக்கிரமாக திட்டுவது, ஏமாற்றுவது, பண மோசடி செய்வது, பிடிக்கவில்லை என்றாலும்கூட பின் தொடர்வது போன்ற செய்கைகளால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளங்களில் வக்கிரமாக, வன்மமாக பதிவு செய்யப்படுவதால், பெண்கள் பலர் இணையத்தில் பயணிக்கவே பயப்படுகின்றனர். தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய முன்வருவதில்லை. சமூக வலைதளத்தில் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, மனநிம்மதியை இழக்கிறார்கள். இணையத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, நேரிடையாகவும் பாதிக்கப்படுவதால், உயிருக்கும், கவுரவத்துக்கும் அஞ்சி பல பெண்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இணையத்தில் பயணிப்பவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து, போலி முகவரி, போலி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து, பெண்களை ஏமாற்றுகின்றனர். இணையத்தில் உண்மை முகம் தெரியாததால், குற்றம் செய்பவர்களுக்கு அதுவே மிகப் பெரிய பலமாக, ஆயுதமாக அமைந்து விடுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நம்பிக்கையை, தைரியத்தை கற்றுக்கொடுப்பதே இதற்குத் தீர்வு. மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக் கூடாது என்ற தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். குடும்பம், சட்டம் மற்றும் காவல், நீதிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு அரணாக துணை நிற்க வேண்டும். காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

ஆபாச சித்தரிப்புகளை இணையத்திலிருந்து அகற்ற வழிவகை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிராக ஏற்படும் இணையக் குற்றங்களை ஆராய மகளிர் காவல் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், இணையக் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். மகளிர் நீதிமன்றங்கள், போக்சோ நீதிமன்றங்கள்போல சைபர் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். பல இணைய பொதுவெளி தளங்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால், உலகளாவிய சட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x