Published : 23 Feb 2025 11:50 AM
Last Updated : 23 Feb 2025 11:50 AM
சென்னை: தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது வேதனைக்குரியது. அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவக் குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். காரணம் வருமானம் ஈட்ட முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக அண்மையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அது பெரும் பிரச்னையாக வெடித்தது. அதனை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலும் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு காரணம் இலங்கை அரசின் முறையற்ற நடவடிக்கைகள் தான்.
எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 32 பேரை விடுவிக்கவும், அவர்களின் 5 விசைப்படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு ஏற்ப இலங்கை அரசுடன் கண்டிப்போடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment