Published : 23 Feb 2025 12:05 PM
Last Updated : 23 Feb 2025 12:05 PM
சென்னை: தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை திமுக அரசு வழங்காத நிலையில், மனஉளைச்சல் காரணமாக வேல்முருகன் என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த அ. வேல்முருகன் இடம் பெற்றிருந்தார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பணி நியமன ஆணை வழங்கப்படாததன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அ. வேல்முருகன் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக அரசின் மெத்தனப் போக்கினால், அலட்சியப் போக்கினால், நிர்வாகத் திறமையின்மையால், வேல்முருகன் உயிர் பறிபோயிருக்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பணி நியமன ஆணைகளை வழங்க காலதாமதப்படுத்தும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசின் ஆமை வேகச் செயல்பாட்டால், ஒரு குடும்பம் இன்று ஆதரவின்றி நிற்கிறது. இந்தத் தருணத்தில் உயிரிழந்த வேல்முருகன் அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசிற்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...