Published : 23 Feb 2025 11:04 AM
Last Updated : 23 Feb 2025 11:04 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள செல்வப்பெருந்தகை. தனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை சந்தித்து மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் எழுச்சி: பின்னர், செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது: பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்தது மனநிறைவை தருகிறது. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்காக அவரது பாணியில் கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இதற்கு ஒருசிலர் தவிர மற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த பணிகளை பார்த்து தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
விரைவில் சுற்றுப்பயணம்: கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 3 முறை சுற்றுப்பயணம் செய்தேன். 4-வது கட்ட பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன். காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. அதனால், கருத்துகளை கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. எனக்கு எதிராக கூறப்படும் புகார்கள் குறித்து கட்சி தலைமை விசாரித்து உரிய முடிவெடுக்கும். இதுபோன்ற புகார்களால் நான் மேலும் ஊக்கம் பெறுவேன். கட்சி பணியை இன்னும் தீவிரப்படுத்துவேன்.
'வாஷ் அவுட்' செய்வார்கள் - இந்த மண்ணின் மைந்தர்களை ‘கெட் அவுட்’ என்று வெளியேற சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு கூறி ‘ஹேஷ்டேக்’ செய்பவர்களை மக்கள் ‘வாஷ் அவுட்’ செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஏ.முத்தழகன், சீரமைக்கப்பட்ட சர்க்கிள், வட்ட கமிட்டிகள் நி்ர்வாகிகள் பட்டியலை செல்வபெருந்தகையிடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...