Published : 30 Jul 2018 12:08 AM
Last Updated : 30 Jul 2018 12:08 AM

சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை: நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன; 2-ம் கட்ட இழப்பீடு வழங்கும் பணி தீவிரம்

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. நில உரிமையாளர்களுக்கு முதல் கட்ட இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2-ம் கட்டமாக இழப்பீடு வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஒசகோட்டை வரை சுமார் 250 கிமீ தூரத்துக்கு சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2012-ம் ஆண்டே வந்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மெதுவாகவே நடைபெற்று வந்தன.

இந்தச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில்ஸ்ரீபெரும்புதூர், கூத்திரம்பாக்கம், தொடூர், கீழ்பொடவூர், மேல்பொடவூர், பரந்தூர், கோவிந்தவாடி அகரம் ஆகிய பகுதிகள் வழியாகச் செல்கிறது. பின்னர் திருமால்பூர், நெமிலி, அரக்கோணம், குடியாத்தம், மாலூர் வழியாக பெங்களூரு எல்லைக்கு அருகில் உள்ள ஒசகோட்டைக்குச் செல்கிறது.

மொத்தம் ரூ.7800 கோடி செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சாலைக்காக தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 2600 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களில் இருந்து மட்டும் 1000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சாலை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, "சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகச் செல்லும் சாலையே தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 372 கிமீ தூரம் உள்ள இந்தச் சாலையில் செல்வதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது. அதேபோல் சித்தூர், கோலார் வழியாகச் செல்லும் சாலையில் பயணம் செய்தால் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது.

தற்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து பெங்களூரு நகர் எல்லைக்கு அருகில் உள்ள ஒசகோட்டை வரை செல்லும் புதிய விரைவுச் சாலை சுமார் 250 கிமீ தூரம் இருக்கும். 90 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இந்தச் சாலையில் 120 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இதனால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயண நேரம் 4 மணி நேரமாகக் குறையும். பல தொழில் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் வழியாக இந்தச்சாலை செல்கிறது. இது போன்ற சாலைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது வேதனையானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது" என்றனர்.

இந்தத் திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தேசிய ஆணையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா கூறும்போது, "சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. நில உரிமையாளர்களுக்கு முதல் கட்ட இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2-ம் கட்ட இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலை முழுவதுமாக 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணி சற்று பொறுமையாகத்தான் தொடங்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x