Published : 23 Feb 2025 08:54 AM
Last Updated : 23 Feb 2025 08:54 AM
கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக, விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
கோயம்பேடு – பட்டாபிராம் வெளி வட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கே.கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் மு.அ.சித்திக், திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் ஆகியோர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வழித்தடத்தில் பயணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்துக்கு முன்பு என 3 இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைந்து கட்டப்படும்.
மொத்தம் 21.76 கி.மீ. தூரம் கொண்டுள்ள இந்த தடத்தில், 19 இடங்களில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். மொத்தம் ரூ.9,744 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாநில மற்றும் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெட்ரோ ரயில் நிலையங்கள்: இத்திட்டத்தில், கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் சாலை, கோல்டன் பிளாட் சந்திப்பு, வாவின் முதல் பிரதான சாலை, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ், டன்லப், அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்தூரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டாபிராம், வெளிவட்ட சாலை ஆகிய 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது.
மேலும், ஆவடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் வகையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment