Published : 22 Feb 2025 03:26 PM
Last Updated : 22 Feb 2025 03:26 PM
சென்னை: “தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்து வீரவசனம் பேசியவர், ஊழல் கூடாரத்தில் இளைப்பாறிக் கொண்டு டப்பிங் பணி செய்கிறார்,” என மநீம தலைவர் கமல்ஹாசனை தவெக மறைமுகமாகவும் கடுமையாகவும் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மாநில இணைச் செய்தித் தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வளவு நாளாக ஒருவர் பேசியது தான் மக்களுக்கு புரியவில்லை என்றால், இப்போது அவர் யார், எதற்காக வந்தார் என்பது அவருக்கே புரியாமல் பேசி வருகிறார். அவர் யாரென்று நேரடியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொல்லாமலே மக்களுக்கு புரியும்.
ரசிகர்களும், மக்களும் வாக்காளர்களாக மாறுவது அந்த நடிகரின் மக்கள் செல்வாக்கு, தலைசிறந்த கொள்கைகள், தமிழகம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு, மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஆகியவற்றை சார்ந்தது.ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்று திடீரென போதி மரம் அடியில் அமர்ந்து ஞானம் பெற்றது போல் அறிவாலயத்தில் கலந்து கரைந்த பின் பேசி வருகிறார்கள். எம்ஜிஆர் ரசிகர்கள் வேறு, சிவாஜி ரசிகர்கள் வேறு, ரஜினி ரசிகர்கள் வேறு, மற்ற ரசிகர்கள் வேறு, எங்கள் தலைவர் விஜய் ரசிகர்கள் வேறு.
எம்ஜிஆரின் அரசியல் வெற்றியை சிவாஜி பெற முடியவில்லை. எம்ஜிஆர் தனது ரசிகர்களை அரசியல்மயப்படுத்தி வாக்காளர்களாக்கியது போல எங்கள் தலைவர் கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் எப்படி வாக்காளர்களாக மாற்றுகிறார் என்பதை பாருங்கள். ஒருவரது செயல்பாடுகள் தான் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்யும். எந்த ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை எல்லாம் உடைத்து வீர வசனம் பேசி வந்தார்களோ, இன்று அதே ஊழல் கூடாரத்தில் சுயநலனுக்காக இளைப்பாறிக் கொண்டு அவர்களுக்காக டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள்.
மக்களுக்காக மக்களை நம்பி உழைத்தால் என்றுமே மக்கள் ஆதரிப்பார்கள். பணி ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு ‘பிக்பாஸ்’ பணிகளை செய்து வந்தால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள். பொது நலத்துடன் உழையுங்கள்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...