Published : 22 Feb 2025 02:06 AM
Last Updated : 22 Feb 2025 02:06 AM
நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் செயல்படும், கமலா கைவினைப் பொருட்கள் அங்காடியில் விற்பனை செய்யப்படும், புடவைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்து, நடிகையும், கதை சொல்லியுமான ரேவதி சங்கரன் வாடிக்கையாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கைவினைப் பொருட்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மக்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வளப்படுத்தி உள்ளது. பாரம்பரியத்தின் அற்புதமான எடுத்துக்காட்டுகளில் இன்று வரை தொடர்ச்சியாய் வருகின்றன.
மாறி வரும் சூழலில் அதன் உள்ளார்ந்த மதிப்பை பாதுகாக்கவும், கைவினைஞர்களின் அடையாளம் மற்றும் தேவைகளை மையமாகக் கொண்டு, கைவினை மீளுருவாக்கத்தை தூண்டும் வகையில், இந்திய கைவினைக் கவுன்சில் 1964-ம் ஆண்டு சென்னையில் தலைமையிடமாகக் கொண்டு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவரால் தொடங்கப்பட்டது.
இலாப நோக்கமற்ற சங்கமான இது தொடங்கப்பட்டதில் இருந்து இந்திய கைவினைக் கவுன்சில், கைவினைஞர்கள் மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய அரசு மற்றும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக கண்காட்சிகள், கைவினை பஜார், பட்டறைகள், செயல்விளக்கங்கள் மூலம் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை இக்கவுன்சில் வழங்கி வருகிறது.
மேலும், கடந்த 2017 ம் ஆண்டு முதல் ‘கமலா’ என்ற பெயரில் கைவினைக் பொருட்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமாக கடை திறக்கப்பட்டது. இது கைவினை கலைஞர்களுக்கு தொடர்ச்சியான சந்தை வாய்ப்பை வழங்கி வருகிறது.
சென்னை, எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை வளாகத்தில் செயல்பட்டு வந்த கமலா கைவினைப் பொருட்கள் அங்காடி தற்போது, ராயப்பேட்டை, டிடிகே சாலையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த அஙகாடியில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இக்கடையில் விற்கப்படும் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கில், பிரபல தொலைக்காட்சி பிரபலமும், நடிகையுமான ரேவதி சங்கரன் பங்கேற்று தென்னிந்திய புடவைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார்.
இக்கடையில் மதுரை சுங்குடி புடவை, காஞ்சிபுரம் காட்டன் புடவைகள், டெல்லி லினன் மற்றும் துசார் புடவைகள், மகாராஷ்டிராவின் பைதானி புடவைகள், மேற்குவங்கத்தின் பேகம்பூர் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் என பல்வேறு விலைகளில் உள்ளன.
இதேபோல், ரூ.30 ஆயிரத்துக்கு டெரகோட்டா மண் சிலைகள், ரூ.400 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான பெண்கள் மணி பர்ஸ், ரூ.1,9700-க்கு திருப்பதி கல்சட்டி, ரூ.900 முதல் ரூ.3 ஆயிரம் விலையுள்ள மரப்பாச்சி பொம்மைகள் , ஆந்திரா கொண்டப் பள்ளி பொம்மைகள், ரூ.9,800 விலையுள்ள பத்தமடை பட்டு பாய், ரூ.3 ஆயிரம் விலையுள்ள பத்தமடை பாய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment