Published : 21 Feb 2025 06:03 AM
Last Updated : 21 Feb 2025 06:03 AM
ஆவடி: திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டியுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி குழும வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியை ஒட்டியுள்ள இடத்தில் தனியார் நடத்தும் ‘தின்னர்’ எனப்படும் ரசாயன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
சார்லஸ் என்பவர் நடத்தி வந்த கிடங்கில் தின்னர் சேமித்து வைக்கப்பட்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த சேமிப்பு கிடங்கின் ஒரு பகுதியில் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 8 வாகனங்களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் 15 லாரி தண்ணீர், ரசாயன நுரையை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 14 ஆயிரம் லிட்டர் தின்னர் முழுமையும் கொழுந்துவிட்டு எரிந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் சேமிப்புக் கிடங்கு முழுமையாக தீக்கிரையானது.
இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம், தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் 3 தளங்கள் கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதியினுள் புகுந்தது. உடனே அக்கட்டிடத்தில் இருந்த சுமார் 110 மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் துரிதமாக வெளியேற்றினர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தனியார் கல்வி குழும வளாகத்தில் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேசன் ஆகிய பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கும் உடனடியாக விடுமுறை விடப்பட்டது.
இந்த தீவிபத்தால் பள்ளி வளாகத்தில் இருந்த 5 சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகின. பள்ளி நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகம், வகுப்பறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான நூல்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் இருக்கைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
தகவலறிந்த ஆவடி எம்எல்ஏவும் அமைச்சருமான சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் கந்தசாமி, ஆவடி வட்டாட்சியர் உதயம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து, தீயணைப்பு பணிகளைத் துரிதப்படுத்தினர். திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...